மூடப்படாத பெட்டகம்! சுவற்றில் ஓட்டை! ஆச்சி மசாலா! லலிதா ஜூவல்லரி கொள்ளையில் எழும் பகீர் சந்தேகங்கள்!

திருச்சி லலிதா ஜூவல்லரியில் இருந்து சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை போன சம்பவம் தொடர்பாக எழும் சந்தேகங்கள் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் மொத்தம் 6 காவலாளிகள் பணியில் இருக்கிறார்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி, பிற்பகல் 2 மணி முதல் இரவு பத்து, இரவு பத்து மணி முதல் மறு நாள் காலை என 6 பேரில் தலா 2 பேர் சுழற்சி முறையில் கடையில் எப்போதும் இருப்பார்கள்.

அடுத்த ஷிப்ட் காவலாளி வந்த பிறகு தான் முதல் ஷிப்ட் காவலாளி சென்றாக வேண்டும். அப்படிப் பார்த்தால் கொள்ளை போன இரவில் இரண்டு காவலாளிகள் அங்கு இருந்திருக்க வேண்டும். மேலும் காவலாளிகள் இரவு நேரத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் கடையின் பின்புறத்தை கண்காணித்திருக்க வேண்டும்.

ஆனால் காவலாளிகள் அதனை செய்தார்களா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் கடையின் பின்புறம் போடப்பட்டுள்ள ஓட்டையை போட்டு முடிக்க எப்படியும் 2 மணி நேரம் ஆகும் என்கிறார்கள் போலீசார். சிறிய சப்தம் கூட வராமல் அந்த ஓட்டையை கொள்ளையர்கள் எப்படி போட்டார்கள் என்பது தான் கேள்விக்குறி.

மேலும் ஒரே நாளில் அந்த ஓட்டையை போட்டார்களா? அல்லது பல நாட்கள் முயன்று அந்த ஓட்டையை போட்டு முடித்தார்களா? என்கிற கேள்வி எழுகிறது. மேலும் ட்ரில் மிசினை வைத்து ஓட்டை போட்டிருக்கலாம் என்கிறார்கள் போலீசார். ட்ரில் மிசின் இயங்கும் போது வெளியாகும் சப்தம் இரவு நேரத்தில் காவலாளிகளை எப்படி எட்டாமல் இருந்திருக்கும் என்கிற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதே சமயம் கடைக்குள் நன்கு தெரிந்தவர்கள் போல் திருடர்கள் இயங்குகிறார்கள். வந்தவர்கள் தரைத்தளத்தை மட்டும் கொள்ளை அடித்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். அப்படி என்றால் மற்ற இரண்டு தளங்களிலும் தங்கம், வைரம் இல்லை என்பது அவர்களுக்கு தெரிந்துள்ளது. மேலும் தரைத்தளத்தில் வளையல்கள் இருக்கும் கண்ணாடி பெட்டகம் மட்டுமே மூடி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் விலை உயர்ந் நெக்லஸ்கள், செயின்கள் உள்ளிட்ட பெரிய ஆபரணங்கள் இருக்கும் கண்ணாடிப் பெட்டகம் மூடப்படவில்லை. இதனால் வளையல்களை அவர்களால் திருட முடியவில்லை. வளையல் இருந்த பெட்டகத்தை மூடி வைத்தது போல் ஏன் பெரிய நகைகள் பெட்டகத்தை மூடவில்லை என்கிற கேள்விக்கு லலிதா ஜூவல்லரி மேலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சுமார் ஒன்னே முக்கால் மணி நேரம் திருடர்கள் உள்ளே இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்புறம் அவர்கள் நுழைந்த போதும் எந்த சப்தமும் வராத நிலையில் ஒன்னே முக்கால் மணி நேரமும் சிறிய சப்தம் கூட வராமல் அவர்களால் கொள்ளையடித்திருக்க முடியாது என்கிறார்கள் போலீசார். இதனால் காவலாளிகளிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே திருச்சி லலிதா ஜூவல்லரியில் இருந்து அண்மையில் சுமார் 60 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக சொல்கிறார்கள். நஷ்டத்தை காரணம் காட்டி இந்த பணிநீக்கம் நடைபெற்றதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் திருச்சி லலிதா ஜூவல்லரி நஷ்டத்தில் இயங்கியதா என்கிற சந்தேகமும் இந்த கொள்ளை வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

மேலும் மோப்ப நாய் கவனத்தை திசை திருப்ப ஆச்சி மசாலா மிளகாய் பொடியை வாங்கி வந்து கொள்ளையர்கள் தூவிச் சென்றுள்ளனர். மொத்தமாக அவர்கள் அந்த மசாலாவை எங்கிருந்து வாங்கினர் என்கிற கேள்விக்கும் விடை காண விசாரணை நடைபெற்று வருகிறது.