தீபாவளிக்கு செய்யவேண்டிய லட்சுமி குபேர பூஜை! வற்றாத செல்வம் தரும் திருநாள்!

ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், சேர்ந்த செல்வம் குறையாமல் இருக்கவும் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை.


இப்பூஜையின் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருள் மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும். தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது ஐதீகம். லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள்.

மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம்.

தீபாவளி அன்று லட்சுமி குபேர பூஜையோடு குபேர பகவானுக்கு நாணய வழிபாடு செய்வதும் மிகமிக சிறப்பு வாய்ந்தது. தீபாவளி அன்று குபேர பகவானுக்காக செய்யப்படும் இந்த நாணய வழிபாடு, நிலையான செல்வத்தை நமக்கு அருளும் என்பது நம்பிக்கை.

லட்சுமி குபேர பு+ஜை செய்ய உகந்த நேரம் : பிற்பகல் : 2.00 மணி முதல் 4.30 மணி வரை இரவு : 9.00 மணி முதல் 12.00 மணி வரை. குபேர சக்கரம் அந்த எண்களோடு பச்சரிசி மாவு கொண்டு கோலம் போல் போடவேண்டும். ஒரு கட்டத்தில் உள்ள எண்கள் அளவு காசுகள் வைக்கலாம்.

குபேரனுக்கு பிடித்த எண் 5. 5 ரூபாய் நாணயங்கள் மொத்தம் 216 காசு தேவைப்படும். சக்கரத்தை உதிரி பூக்களால் அலங்கரிக்கவும். லட்சுமி குபேரன் படம் அல்லது சிலை வைக்கலாம். சந்தனத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வலம்புரி சங்கு கல் உப்பு ஜாடி என லட்சுமி அம்சங்களை வைத்து வழிபடுவது அவசியம்.

ஒரு கலசம் வெள்ளி அல்லது செம்பு சொம்பு அல்லது குடம் எடுத்து அதன் உள்ளே பன்னீர் , ஏலத்தூள், லவங்கம் பட்டை, சந்தனம் அரகஜா, அகில் புனுகு ஜவ்வாது என எவ்வளவு வாசனை திரவியங்கள் என்ன முடியுமோ அத்தனையும் சேர்த்து தண்ணீர் நிரப்பி அதற்கு மேல் தேங்காய் மஞ்சள் பூசி எட்டு மாவிலைகளோடு வைத்து இந்த கலசத்தை ஒரு முக்காலி மேல் அரிசி அல்லது நெல் பரப்பி வைக்கவும்.

கலசத்துக்கு முகம் வைத்து அலங்கரித்து மல்லிகை மாலை தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.பாதுகாப்பான இடமெனில் தங்க நகைகளும் போடலாம். லட்சுமிக்கு 5 வகை கனிகள் வைக்க வேண்டும். செவ்வாழை , பெருநெல்லி, மாதுளை அவசியம் இருக்க வேண்டும். பூஜையில் மல்லி, தாமரை இருப்பதோடு வாழைப்பூ அவசியம் வைக்க வேண்டும்.

காரணம் இந்த செல்வம் வாழையடி வாழையாக தங்க வேண்டும் என்பதற்காகவே, வாழைப்பூ அவசியம். பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை செய்ய வேண்டும். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும்.

அதன்பின் குபேர மந்திரங்கள் 'குபேராய நமஹ" 'தனபதியே நமஹ" என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர், லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். பின் நைவேத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் (நாணயங்கள்) வைக்கப்பட வேண்டும்.

அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார். இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.

குபேர பகவானுக்கு செய்யப்படும் நாணய வழிபாட்டை தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பௌர்ணமிகள் செய்யலாம். இவ்வழிபாட்டை ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.