21 லட்சம் தொழிலாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு! எடப்பாடி துவக்கி வைத்த அடுத்த அதிரடி திட்டம்!

அனைத்து அம்மா உணவகங்களிலும் தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி துவக்கி வைத்துள்ளார்.


சென்னை மாநகராட்சியில்  உள்ள 407 அம்மா உணவகங்கள்,மற்றும் தமிழகத்தின் 11 மாநகராட்சிகள் மற்றும் 125 நகராட்சிகளில் உள்ள 251 என மொத்தம் 658 அம்மா உணவகங்களிலும் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. 

சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கி வரும் தமிழக அரசின் அம்மா உணவகங்களில், பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு  விலையில்லா ( இலவச) உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி 7 நபர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். சென்னை சாந்தோமில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் அம்மா உணவகத்தில் இந்த திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் மற்ற உணவங்களிலும் இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டிற்கு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகத்தில் படி படியாக செயல்பாட்டிற்கு வரும்.  இத்திட்டத்தால் மொத்தம் உள்ள 658 உணவகங்கள் மூலம் 21லட்சம்  தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.

ஏற்கனவே பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படும் உணவு வகைகள், தொடர்ந்து அதே விலையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி  காலை உணவு ( காலை 7 மணி முதல் 10மணி வரை)

இட்லி ஒன்றின் விலை - 1ரூபாய்

பொங்கல் - 5 ரூபாய்

மதிய உணவு ( 12 மணி முதல் 3 மணி வரை)

சாம்பார் சாதம் - 5 ரூபாய்

எலுமிச்சை சாதம் - 5 ரூபாய்

கருவேப்பிலை சாதம் - 5 ரூபாய்

தயிர் சாதம் - 3 ரூபாய்

மாலை உணவு ( 6 மணி முதல் 9 மணி வரை)

ஒரு செட் சப்பாத்தி - மூன்று ரூபாய் 

என்ற மேலே குறிப்பிடப்பட்டுள்ள  பழைய விலையிலேயே பொதுமக்களுக்கு விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் தஙகளது அடையாள அட்டையை காட்டி அம்மா உணவகத்தில் வரம்புடன் இலவச உணவை சாப்பிட்டு செல்லலாம்.