பாஜகவுடன் தேமுதிக இணைகிறது? டெல்லியில் எல்.கே.சுதீஷ் ரகசிய பேச்சுவார்த்தை!

பாஜகவுடன் தேமுதிகவை இணைப்பது குறித்து டெல்லியில் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


2014 மற்றும் 2019 நாடாளுமன்ற தேர்தல்களில் தேமுதிக பாஜக கூட்டணியில் இடம் பெற்று இருந்தது. இந்த இரண்டு தேர்தல்களிளுமே தேமுதிக படு தோல்வி அடைந்தது. கடந்த தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்த நிலையிலும் கூட தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு விஜயகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனை அடுத்து டெல்லி சென்று விஜயகாந்தை பிரதமர் மோடி கன்னத்தை கிள்ளி பாச மழை பொழிந்ததை அரசியல் அறிந்தவர்கள் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு விஜயகாந்தை மோடி அப்போது வரவேற்றது காரணம் அப்போதே தேமுதிகவை பாஜகவோடு இணைக்குமாறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

ஆனால் அப்போது ஓரளவு உடல் நலத்தோடு இருந்த விஜயகாந்த் ஒரே வார்த்தையில் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் தான் நடந்து முடிந்த தேர்தலிலும் பாஜகவோடு கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. வழக்கம் போல் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இருந்தாலும் கூட டெல்லியில் மோடியின் பதவி ஏற்புக்கு தேமுதிகவிற்கு அழைப்பு வந்தது. பிரேமலதா விஜயகாந்த் டெல்லி செல்லவில்லை. ஆனால் அவரது சகோதரரும் தேமுதிகவின் துணைச் செயலாளருமான எல்.கே.சுதீஷ் டெல்லி சென்றார். பதவி ஏற்பு முடிந்த பிறகும் கூட சுதீஷ் இன்னும் டெல்லியில் தான் இருக்கிறார்.

இதற்கு காரணம் பாஜக - தேமுதிக இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை மிகத் தீவிரமாக சென்று கொண்டிருப்பது தான். தேமுதிகவை பாஜகவோடு இணைத்தால் மாநில தலைவர் பதவியை தனது சகோதரி பிரேமலதாவுக்கு வழங்க வேண்டும் என்பது தான் சுதீஷின் முக்கிய கோரிக்கை என்கிறார்கள். தவிர மாநிலங்களவை எம்பி பதவியுடன் தனக்கு கேபினட் அமைச்சர் பதவி என்றும் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.

தற்போது அமித் ஷாவின் வலது கரமாக இருக்க கூடிய பாஜகவின் 2ம் கட்ட நிர்வாகிகள் சுதீசுடன் பேசி வருவதாகவும் விரைவில் சுதீஷ் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாகவும் கூறுகிறார்கள். அந்த சந்திப்பின் போது பாஜக - தேமுதிக இணைப்பு உறுதியாகும் என்றும் அடித்துச் சொல்கிறது டெல்லி வட்டாரத் தகவல்.

தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள தேமுதிகவை தூக்கி நிறுத்த தற்போது அக்கட்சியில் யாரும் இல்லை. பிரேமலதாவின் பிரச்சாரமும் எடுபடவில்லை. கேப்டனாலும் இனி வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்கிறார்கள். இதனால் பாஜகவோடு தேமுதிகவை இணைப்பது தான் சரியாக இருக்கும் என்று பிரேமலதா கருதுவதாகவும் அதனால் தான் சுதீஷ் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதே போல் பாஜகவிற்கு தமிழகத்தில் வலுவான அடித்தளம் தேவைப்படுகிறது. தேர்தல்களில் தேமுதிக தோற்றாலும் கூட அக்கட்சிக்கு என்று வாக்கு வங்கி உள்ளது. மேலும் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து நகரங்களிலும், அனைத்து கிராமங்களிலும் தேமுதிகவிற்கு பிரதிநிதிகள் உள்ளனர். அமைப்புகள் இருக்கின்றன.

எனவே பாஜகவோடு தேமுதிகவை இணைத்து  தமிழகத்தில் காலூன்ற பாஜக வியூகம் வகுத்துள்ளதாக சொல்கிறார்கள். இதுபற்றி தேமுதிக தரப்பில் கேட்ட போது அப்படி எல்லாம் எதுவும் இல்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டனர். சுதீஷ் ஏன் இன்னும் டெல்லியில் இருக்கிறார் என்கிற கேள்விக்கு அது அவரது பர்சனல் விஷயம் என்று பதில் அளித்தார்கள்.