கும்பகோணம் அருகே மதமாற்ற முயற்சியை தடுத்து நிறுத்தியதால் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ராமலிங்கம் கொலை வழக்கில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமலிங்கம் கொலை! பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, SDPI இயக்கத்தினர் 3 பேர் கைது!
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். கேட்டரிங் நிறுவன உரிமையாளரான இவர் அருகே உள்ள கிராமத்திற்கு கடந்த 5ந் தேதி தனது நிறுவனத்திற்கு பணியாட்களை வேலைக்கு அமர்த்த சென்று இருந்தார். அப்போது அங்கு மதப்பிரச்சாரம் செய்தவர்களுடன் ராமலிங்கத்திற்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்துக்களை மதம் மாற்றுவது ஏன் என்று கேட்டு ராமலிங்கம் அவர்களுடன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். மேலும் அவர்கள் அணிந்திருந்த குல்லாவை பறித்து ராமலிங்கம் அணிந்தார். அதோடு மட்டும் அல்லாமல் விபூதியை எடுத்து வந்து அந்த மூன்று பேருக்கும் பூசிவிட்டார். இதனால் ஏற்பட்ட தகராறை அங்கிருந்தவர்கள் விலக்கி விட்டனர்.
இந்த நிலையில் வாக்குவாதம் நடைபெற்ற தினத்தன்று இரவு ராமலிங்கத்தை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். காலையில் மதமாற்ற முயற்சியை தடுத்து நிறுத்திய காரணத்தினால் தான் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
ராமலிங்கம் மதமாற்றம் தொடர்பாக மூன்று பேருடன் பேசிய வீடியோ வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கொலை கடந்த 5ந் தேதி இரவு நடைபெற்றது. ஆனால் போலீசாரால் 7ந் தேதி காலை வரை யாரையும் கைது செய்ய முடியவில்லை. மதப்பிரச்சாரத்திற்கு வந்து ராமலிங்கத்துடன் வாக்குவாதம் செய்தவர்களை அழைத்து போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அவர்களுக்கும் கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது. இதனை அடுத்து மதப்பிரச்சாரத்திற்கு வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தான் கொலையாளிகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததாக கூறி 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் ராமலிங்கத்தை வெட்டிக் கொலை செய்ததாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று பேருமே திருபுவனம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று போலீசார் கைது செய்துள்ளனர். கொலையாளிகள் மூன்று பேரையும் ராமலிங்கத்தின் மகன் அடையாளம் காட்டியதாகவும் சொல்கிறார்கள்.
அதன்படி கைது செய்யப்பட்ட
திருபுவனத்தை சேர்ந்த முகமது தவ்பீக், முகம்மது பர்வீஸ், தவ்ஹீத் பாட்ஷா ஆகிய
மூவரும் விசாரணைக்கு பிறகு கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கொலையாளிகளை போலீசார் கைது செய்திருப்பதன் மூலம் திருபுவனத்தில் நீடித்து வந்த
பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.