தமிழகத்திலும் ஒரு ஷீரடி சாய்பாபா கோயில் வந்தாச்சு! அருள் அள்ளித்தரும் சாயிநாதன்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பூந்தோட்டம் அருகே 34 கூத்தனூரில் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோயில் அமைந்துள்ளது.


பாபாவின் ஆசியால் 2011-ஆம் ஆண்டு 34 கூத்தனூரில் பூமி பூஜை போடப்பட்டு ஒரு கீற்று கொட்டகையில் பாபா திருவுருப்படம் வைத்து அவரை வழிபடத் துவங்கினர். தினமும் காலை 7 மணி, மதியம் 12 மணி, மாலை 6, இரவு 8 மணி என நான்கு வேளை ஆரத்தியும் சிறப்பாக நடைபெற்று வந்தது. வியாழக்கிழமை தோறும் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளும் அன்னதானமும் நடைபெறும். நாளடைவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இங்கு வரும் பக்தர்களின் வேண்டுதல்களை கலியுகத்தின் கற்பக விருட்சமான சீரடி சாய்பகவான் தீர்த்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை.

பாபாவின் புகழ் இக்கிராமம் மட்டுமின்றி வெளியூர், வெளிமாவட்டங்களுக்கு பரவியது. இதனால் தமிழகம் முழுவதுமிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை பாபாவிடம் முறையிட பாபா அவர்களால் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.

பாபாவின் திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 11.09.2014-ல் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சீரடியில் இருந்து வந்திருந்த சாய்சாது அச்சுதானந்த சுவாமிகள் கொடியேற்றி சிறப்பித்தார். இதில் தமிழகத்திலிருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பாபாவின் சிறப்புகள்: பாபா கொட்டகை உள்ள இடத்தில் பட்ட வேம்பு துளிர்விட்டு வளர துவங்கியது. அந்த மரம் தல விருட்சமாகவும், குருஸ்தலமாகவும் வணங்கப்பட்டு வருகிறது. அன்று சீரடியில் எப்படி பாபா அமர்ந்து வேப்பமர இலைகள் இனிக்க ஆரம்பித்ததோ அதைபோல் இம்மரமும் பட்டு துளிர்விட ஆரம்பித்தது. வேப்ப மரத்தில் திருமணம் ஆகாதவர்கள் பாபாவிடம் பூஜை செய்து மஞ்சள் கயிறை வேப்பமரத்தில் கட்டினால் விரைவில் தடை நீங்கி உடனே திருமணம் நடைபெறும்.

குழந்தை பாக்கியம் இல்லாதோர் பாபாவிடம் பூஜை செய்து தொட்டிலை வேப்ப மரத்தில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும். இதேபோல் தீராத நோய் உள்ளவர்கள் இந்த இலையை சாப்பிட்டால் நோய் குணமடைந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அன்னதானம்:

இக்கோயிலில் வியாழக்கிழமை மட்டுமின்றி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இங்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைகள் பிரதான அன்னதானமாக செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த சர்வமத வழிப்பட்டு துவாரகா மாயியை பராமரித்து வருபவர் பாபாவின் மீது பக்தி கொண்ட சாய் உபாசகர் சாய் சுதாகர்.

தமிழ்நாடு தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த இவர் பணியை துறந்து முழுவதுமாக பாபாவின் ஆன்மீக பணியில் ஈடுபட்டு வருகிறார். பாபாவின் இந்த வழிபாட்டு மையம் தென்னகத்தின் சீரடியாக இயற்கை எழில் கொஞ்சும் சோலையாக திகழ்ந்து வருகிறது.

பக்தர்கள் கூட்டம் அதிகமான காரணத்தால் இவ்விடம் விரிவுபடுத்தப்பட்டு ஸ்ரீ சிவசித்தர் சீரடி சாய்பாபா சேரிட்டபுள் டிரஸ்ட் (பதிவு) மூலம் பக்தர்களின் கைங்கர்யத்தால் பாபாவிற்கு சர்வமத வழிபாட்டு துவாரகாமாயி கட்டப்பட்டு அதில் குருதத்தா தேரயர், வலஞ்சுழி விநாயகர், பாலமுருகன் திருவுருவ சிலை நிறுவப்பட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பவுர்ணமி மற்றும் வியாழக்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சாய் சத்திய நாராயண பூஜை நடந்து வருகிறது.

ஸ்ரீ ராம நவமி, குருபூர்ணிமா, சீரடி சாய்பாபாவின் விஜயதசமி சமாதி திரு நாள் போன்றவை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு குரு பூர்ணிமா அன்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.

ஜனவரி 1-ம் தேதி பாபாவின் திருவுருவப்பட ஊர்வலமும், பக்தர்களால் பால் குடமும் எடுத்து வரப்பட்டு சாதி, சமய வேறுபாடின்றி பக்தர்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்து பாபாவின் அனுக்கிரஹத்தை பெற்றுச் செல்கின்றனர். பாபாவிற்கு துனி என்னும் அக்னிகுண்டம் கட்டப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

சின்னகுஞ்சி அம்மாவின் அருளால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. பாபாவின் சேவகி அன்னை இராதாகிருஷ்ணமாயி அவர்களின் திருவுருவச் சிலை தமிழ்நாட்டில் முதன் முதலாக சிவ சித்தர் சீரடி சாய் பாபா ஆலயம் கூத்தனூரில் நிறுவப்பட்டுள்ளது. அனகா லெட்சுமி சமேத தத்தாத்ரேயர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது. இங்கு குழந்தை இல்லாதவர்களுக்கு சிறப்பு சத்திய நாராயண பூஜை செய்து விபூதி தேங்காய் பிரசாதம் வழங்கப்படுகிறது மற்றும் திருமணம் தடை நீங்க பரிகாரம் செய்யப்படுகிறது. ஸாயிநாத பக்திக்கு ஆச்சார்யாள் ஸ்ரீயோகினி ராதாகிருஷ்ணமாயி”

1. கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் இவைகள் பகவானை அடையும் புனித மார்க்கங்கள். இந்த மூன்று யோக மார்க்கத்தையும் அனுசரித்து ஸ்ரீஸாயிநாதனிடம் சரணாகதி பிரம்ம பக்தி புரிந்து இலக்கை அடைந்தவளே அன்னை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயி.

2. ‘சீரடியை பண்டரிபுரமாகவும், சாயிநாதரை ஸ்ரீ விட்டலாகவும் பாவித்து குருபக்திக்கு இலக்கணமாகவும், சாயிநாதனின் குருசேவைக்கு அஸ்திவாரமாகவும் இருப்பது நம் அன்னை ஸ்ரீ ராதாகிருஷ்ணமாயியே.

3.ஸ்ரீசாயிநாதரை மஹாராஜாவாக மாற்றி ‘சீரடியை சனஸ்தானாக விளங்க செய்து யாவருக்கும் வழிக்காட்டியாய் சீரடியில் வாழ்ந்தது நம் இராதாகிருஷ்ணமாயியே.

4. ஸ்ரீசாயிநாதரின் கீர்த்தியை உலகறிய செய்வதற்காக ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ குருபூர்ணிமா, கோகுலாஷ்டமி, சாவடிஊர்வலம் மற்றும் நான்கு வேளை ஆரத்தி மட்டுமின்றி சாயியின் நாம ஜபம் (ஸாயி, ஸாயி), மூலமந்திரமான “ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய ஸாயி” - எனும் திருநாமத்தை உலகறிய செய்தவள் நம் இராதாகிருஷ்ணமாயி.

5. சாயிநாதனின் குருசேவைக்காக மட்டுமே தரணியில் உதித்தவள் நம் இராதாகிருஷ்ணமாயி, ஸாயிபக்திக்கு குருவாக திகழ்பவளே நம் இராதாகிருஷ்ணமாயி.

6. ஸ்ரீசாயிநாதரின் “யோகமாயாவாக” இருப்பவளே அன்னை ஸ்ரீ யோகினி ராதாகிருஷ்ணமாயி அப்படிப்பட்ட உயர்ந்த சாயியின் பிரம்ம ரத்தினமான நம் இராதாகிருஷ்ணமாயி முதன் முதலாக தமிழகத்திலேயே கூத்தனூரில் ஸ்ரீ மஹா சரஸ்வதிக்கு என தனி சன்னிதானம் உள்ளது. அதைப்போல கூத்தனூரில் நம் சிவ சித்தர் ‘சீரடிசாயிபாபா துவாரகாமாயியில் ஒரு தனி சன்னதியில் அன்னை எழுந்தருளி உள்ளார்கள்.