அசத்திய ரஸ்ஸல், ஏமாற்றிய கெய்ல்! KKR அபார வெற்றி!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


டாஸ் வென்ற கிங்ஸ் XI பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய பணித்தது.தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 10 ரன்களுக்கு ஷமி பந்து வீச்சில் அவுட் ஆனார்.இன்றைய போட்டியில் மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய சுனில் நரேன் அதிரடியாக விளையாடி 9 பந்துகளுக்கு 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் உத்தப்பா மற்றும் நிதிஷ் ரானா ஜோடி அபாரமாக விளையாடி கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது. ராணா 34 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னர் களமிறங்கிய அதிரடி மன்னன் ரஸ்ஸல் அவர் பங்கிற்கு கிங்ஸ் XI பஞ்சாப் அணியை அடித்து நொறுக்கினார் . இவர் 17 பந்துகளில் 48 ரன்களை குவித்து அவுட் ஆனார். உத்தப்பா அவுட் ஆகாமல் 67 ரன்களை எடுத்தார்.இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை குவித்தது.

ரஸ்ஸல் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஷமி  வீசிய பந்தில் அவர் போல்ட் ஆனார். அனால் 3 பீல்டர்கள் உள்வட்டத்துக்குள் இருந்ததால் அந்த பந்து நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட ரஸ்ஸல் அடுத்து சிறப்பாக விளையாடி 48 ரன்களை எடுத்தார்.

சேஸிங்கை தொடர்ந்த கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 1 ரன்  மட்டுமே எடுத்து அவுட் ஆனார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்ல் 20 ரன்களை சேர்த்து அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றம் செய்தார்.கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் சார்பாக டேவிட் மில்லர் அவுட் ஆகாமல் 59 ரன்களும், மாயங் அகர்வால் 58 ரன்களும் சேர்த்தனர்.கிங்ஸ் XI பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 190 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதனால் கிங்ஸ் XI பஞ்சாப் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரஸ்ஸல் சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை  வீழ்த்தினார். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அசத்திய ரஸ்ஸல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.