இதுவரை 88 பேருக்கு..! சென்னை மட்டும் அல்ல தமிழகம் முழுவதும் கொரோனா சப்ளை..! கோயம்பேடு விபரீதம்..!

கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய 27 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோயம்பேடு தொடர்புடைய கொரோனா பாதிப்பு மொத்தம் 88 ஆக உயர்ந்துள்ளது.


சென்னையில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதி வேகமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல சென்னையில் இதுவரை 1256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் அதிவேகமாக பரவிவரும் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு சந்தையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவலாக கண்டறியப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த நான்கு நாட்களில் கோயம்பேடு சந்தை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வேலை பார்த்த 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோயம்பேடு சந்தையில் இருந்த சொந்த ஊருக்குத் திரும்பிய 27 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊரான அரியலூருக்கு சென்ற 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து சொந்த ஊரான பெரம்பலூருக்கு சென்ற ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல கோயம்பேடு சந்தையில் வேலை செய்துவிட்டு சொந்த ஊரான கடலூருக்கு சென்ற 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கோயம்பேடு சந்தையில் இருந்து திரும்பிய 600 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட உள்ளதாகவும் கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுவரை கோயம்பேடு தொடர்புடைய கொரோனா பாதிப்பு மொத்தம் 88 என்பது குறிப்பிடத்தக்கது.