திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..! உயிரிழப்பு வதந்திகளை ஓட ஓட விரட்டி உயிரோடு கெத்தாக வந்து நின்ற கிம் ஜோங் உன்..!

வட கொரியாவின் அதிகாரமிக்க தலைவர் கிம் ஜோங் உன் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அவர் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற புகைப்படங்களை அந்நாட்டு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அந்த அறுவை சிகிச்சை தோல்வியில் முடிந்ததால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் றெக்கை கட்டி பறந்தன. இதனை உண்மையோஎன்று நம்பும் வகையில் கிம் ஜோங் உன் பொது நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கவில்லை.

தனது தாத்தாவும் வட கொரியாவின் நிறுவனருமான கிம் 2 சங்கின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கிம் கலந்து கொள்ளவில்லை. வட கொரியாவின் மிக மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படும் இந்த நிகழ்வில் கிம் பங்கேற்கவில்லை என்பதால் அவர் உயிரிழந்துவிட்டார் என்கிற தகவல் மேலும் உறுதியாக பரப்பப்பட்டன.

இந்த நிலையில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பங்கேற்ற நிகழ்ச்சியின் புகைப்படத்தை வட கொரிய ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் சுன்சியான் எனும் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள உரத் தொழிற்சாலையை கிம் திறந்து வைப்பது போன்ற காட்சிகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜொங் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படத்தை வட கொரியாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.