பூட்டிய அறைக்குள் சடலமாக கிடந்த இளம் பெண் டாக்டர்! கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வந்தவருக்கு நேர்ந்த கதி..! சென்னையில் நடந்தது என்ன?

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இறுதியாண்டில் படித்துவந்த மருத்துவ மாணவி ஒருவர் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த சூழ்நிலையில், பூட்டிய அறைக்குள் உயிரிழந்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


வேலூரை பூர்வீகமாகக் கொண்டவர் ரமேஷ். இவர் குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள பெரம்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு பிரதீபா ( வயது 22) என்ற மகள் உள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு மருத்துவ படிப்பை பயின்று வருகிறார். கொரோனா பாதிப்பால் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளும் பணியமர்த்தப்பட்டு வந்துள்ளனர். அந்தவகையில் பிரதீபா கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இதனால் பெரம்பூரில் இருக்கும் தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் , கடந்த 16ஆம் தேதி முதல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்திருக்கும் விடுதியில் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்திருக்கிறார்‌. இந்நிலையில் இன்றைய தினம் காலை நேரத்தில் சகமாணவர்கள் பிரதிபாவின் அறையின் கதவைத் தட்டி இருக்கின்றனர். நீண்ட நேரமாகியும் மாணவி பிரதீபா கதவை திறக்காததால், மற்ற மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்பொழுது பிரதீபா மயக்க நிலையில் விழுந்து கிடந்து இருக்கிறார். உடனடியாக அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை செய்யப்பட்ட பொழுது பிரதீபா ஏற்கனவே இறந்துவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பிரதிபாவின் செல்போனை கைப்பற்றி தடவியல் பிரிவினருக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் மனோகர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் இதுகுறித்து பிரதிபாவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆகியோர் இடத்தில் விசாரணை நடைபெற்றுள்ளது. விசாரணையின்போது சம்பவம் நடைபெற்ற முந்திய தினம் பிரதீபா தன்னுடைய பெற்றோரிடம் செல்போனில் உரையாடி இருக்கிறார். அப்பொழுது கொரோனா பாதிப்பால் தனக்கு அதிகம் வேலைப்பளு இருப்பதாக வருத்தத்துடன் தன் பெற்றோரிடம் கூறி இருக்கிறார் பிரதீபா. 

மேலும் போலீசார் பிரதீபா தங்கியிருந்த அந்த தற்காலிக அறையை தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு தற்கொலை கடிதமும் கிடைக்கவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். ஆகையால் பிரதிபாவின் 

மரணம் மர்மமாகவே உள்ளது என கூறப்படுகிறது. மேலும் பிரதீபாவின் உயிர் இழப்பிற்கான காரணம் என்ன என்று போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

கொரோனா பிரிவில் பணிபுரிந்து வரும் மாணவி உயிரிழந்திருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்து இருப்பாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டு இருப்பாரா? என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இருப்பினும் பிரதிபாவின் பிரேத பரிசோதனை முடிவில் அவரது இறப்பிற்கான காரணம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளிடையே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.