சுத்தம் சுகாதாரமான மாநிலங்கள்! கேரளாவுக்கு முதலிடம்! தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா?

டெல்லி: இந்தியாவிலேயே சுகாதாரம் மிகுந்த மாநிலம் என்ற பெருமையை கேரளா பெற்றுள்ளது.


நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களின் ஆரோக்கிய நிலை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில், ஆரோக்கியமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா என்ற தலைப்பில் நிதி ஆயோக் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கேரளா அதிகபட்ச சுகாதார நிலையுடன் முதலிடம் பிடித்துள்ளது.

அதற்கடுத்த இடத்தில், ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு அண்ட் காஷ்மீர், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்கு வங்கம், ஹரியானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், அசாம், ராஜஸ்தான், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 

இந்த பட்டியலில், கடைசி 4 இடங்களில், மத்தியப் பிரதேசம், ஒடிசா, பீகார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. கடந்த 2016, 17, 18, ஆகிய ஆண்டுகளில், மாநிலந்தோறும் மேற்கொள்ளப்பட்ட சுகாதார மேம்பாட்டு பணிகள், திட்டங்களின் அடிப்படையில் இந்த கணக்கீடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கி உதவியுடன், குடும்ப நல மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த ஆய்வை நடத்தி, முடிவுகளை சமர்ப்பித்ததாக, நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது.