பீட்சா டெலிவரி பாய் ஐபிஎஸ் அதிகாரியான கதை! முயற்சி செய்தால் வானமும் வசப்படும்!

காஷ்மீர் மாநிலத்தில் பீட்சா டெலிவரிபாயாக இருந்த ஒருவர் ஐ.பி.எஸ். அதிகாரியான அற்புதம் உழைப்பின் பெருமையை விளக்கியிருக்கிறது.


ஜம்முவின் நர்வால் என்ற இடத்தைச் சேர்ந்தவர் மொயின்கான் 28 வயதான இவருக்கு ஒரு காலத்தில் மாலை 6 மணி முதல் அதிகாலை 2 மணி வரை பிட்சா டெலிவரியே முக்கியபணியாக இருந்தது.கார் கழுவு கடையில் 3 ஆண்டுகள், ஹோட்டல் சப்ளையர், மளிகைக் கடை உதவியாளர் ஆகிய வேலைகளில் 7 ஆண்டுகள் என வாழ்க்கையைக் கழித்தவர் மொயின்கான்

வேறு ஒருவராக இருந்தால் தனது வாழ்க்கை இந்த வட்டத்துக்குள்ளேயே முடிந்துவிட்டதாக முடிவு செய்து முடங்கிவிட வாய்ப்புள்ள நிலையில் மொயின்கான் இதுவும் கடந்துபோகும், வாழ்க்கையில் வசந்தம் கதவைத் தட்டும் என்ற நம்பிக்கையும், என்றேனும் ஒருநாள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகமும் உள்ளிருந்து இயக்க அவர் தனது முயற்சிகளை தொடர்ந்தார். 

நர்கோட்டா மாவட்டத்தில் உள்ள தண்டாபானி என்ற கிராமத்தில் கல்வி பயிலாத குடும்பத்தில் பிறந்த முதல் பட்டதாரியான மொயின்கானின் அண்ணன் டவுன் சிண்ட்ரோம் என்கிற நோயால் பாதிக்கப்பட்டவர். தந்தை பால் விற்பவர். இத்தகைய  வறுமைக்கிடையில் குடும்பத்தைக் காக்க பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தாலும், அவற்றுக்கிடையே மொயின்கான் கடுமையாக படித்தார். 

நண்பர்களின் உதவியுடன் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரின் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்த அவர்,  தேர்வெழுதி வென்றார். தற்போது உதாம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்று வரும் மொயின்கானிடம் எதிர்காலத்தில் பல ஆக்கபூர்வ சாதனைகளை எதிர்பார்க்கலாம்.