பல பேர் முன்னிலையில் பெண்ணின் துப்பட்டாவை பிடித்து இழுத்த முன்னாள் முதலமைச்சர்!

தொகுதியில் உள்ள பிரச்சனைகளை கூறிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து மைக்கை பறிக்க முயன்ற போது சித்தராமையாவின் கையோடு அந்த பெண்ணின் துப்பட்டா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் மைசூரு அருகே உள்ள வருணா தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் யதீந்திரா. இவர் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் மகன் ஆவார். தனது மகன் யதீந்திராவின் தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்க சித்தராமையா முடிவு செய்தார்.

   இதனை தொடர்ந்து வருணா எனும் இடத்தில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்ட சித்தராமையா பின்னர் மனுக்களையும் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் எம்.எல்.ஏ யதீந்திரா மீது அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

  எம்.எல்.ஏ ஆன பிறகு யதீந்திரா தொகுதிப்பக்கமே வரவில்லை என்று அந்த பெண் ஆவேசமாக கூறினார். மேலும் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பல முறை கொடுத்தும் யதீந்திரா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அந்த பெண் தெரிவித்தார்.

   இதனால் கோபம் அடைந்த சித்தராமையா அந்த பெண்ணை பேச்சை நிறுத்துமாறு கூறினார். ஆனால் அதனை எல்லாம் பற்றிக் கவலைப்படாமல் எம்.எல்.ஏ யதீந்திராவால் தாங்கள் பகுதியில் படும் அவஸ்தையை அந்த பெண் பட்டியலிட்டுக் கொண்டே சென்றார்.

  இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சித்தராமையா திடீரென எழுந்து அந்த பெண்ணின் தோளில் கை வைத்து அழுத்தி உட்காருமாறு கூறினார். ஆனால் அதனை அந்த பெண் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து மைக்கில் பேசுவதிலேயே குறியாக இருந்தார்.

   இதனால் சுத்தமாக நிதானம் இழந்த சித்தராமையா அந்த பெண்ணின் கையில் இருந்து மைக்கை பறிக்க முற்பட்டார். அப்போது அவரது கையுடன் அந்த பெண்ணின் துப்பட்டாவும் வந்துவிட்டது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது.

  பெண் ஒருவர் தோளில் கை வைத்து அநாகரீகமாக நடந்து கொண்டதுடன் அவரது துப்பட்டாவையும் பறித்த சித்தராமையா மீது காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்த ஆரம்பித்துள்ளனர்.