பிரமாண்ட போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு சீல்! அசத்திய நேர்மையான அதிகாரிகள்!

பிரமாண்ட போத்தீஸ் அடுக்குமாடி கடைக்கு சீல் வைத்து நேர்மையான அதிகாரிகள் என்கிற பெயரை கன்னியாகுமரி உள்ளூர் திட்டக்குழுமத்தினர் பெற்றுள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரமாண்டமாக கட்டப்பட்டது போத்தீஸ் ஜவுளிக்கடை. கோலாகலமாக திறப்பு விழா நடத்தி வியாபாரத்தை ஜரூராக நடத்தி வந்தது போத்தீஸ். ஆனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களை நிறுத்தக்கூட போத்தீஸ் அங்கு ஏற்பாடு செய்து தரவில்லை.

   ஏழு மாடிக் கட்டிடங்களை கொண்ட போத்தீஸ் கடையில் வாகனங்களை நிறுத்த இடமில்லையா? என்கிற கேள்வி எழுந்தது. அப்போது தான்  போத்தீஸ் நிறுவனத்தின் மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஆம் வாகன நிறுத்தும் இடம் என்று கூறி கட்டிடத்திற்கு போத்தீஸ் அனுமதி வாங்கியிருந்தது.

   ஆனால் அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்காமல் காய்கறி கடை திறந்து கல்லா கட்டிக் கொண்டிருந்தது போத்தீஸ். மேலும் ஐந்து மாடிகள் கட்ட மட்டுமே அனுமதி பெற்று இருந்த நிலையில் வானுயர ஏழு மாடிகளையும் கட்டி வியாபாரத்தை பெருக்கியது போத்தீஸ். இது குறித்து நாகர்கோவில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் போத்தீஸ்க்கு  நோட்டீஸ் அனுப்பினர்.

   ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தால் நீதிமன்றத்திற்கு சென்று விதிமீறல்களை பொருட்படுத்தாமல் போத்தீஸ் ஜவுளிக்கடை தொடர்ந்து இயங்கி வந்தது. ஆனால் நாகர்கோவில் திட்டக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் போத்தீஸ் எப்படி எல்லாம் விதிகளை மீறியுள்ளது என்பதை புட்டு புட்டு வைத்தனர்.

   இதனை தொடர்ந்து போத்தீஸ் ஜவுளிக்கடைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விதித்த தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீக்கியது. அடுத்த நிமிடமே விரைந்து செயல்பட்ட உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் விரைந்து சென்று போத்தீஸ் கடைக்குள் இருந்த ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை வெளியேற்றினர்.

   அத்துடன் போத்தீஸ் ஜவுளிக்கடையின் ஷட்டரை இழுத்து மூடி சீல் வைத்தனர். கடையின் உள்ளே இருக்கும் பொருட்களுக்கும் உரிமையாளர் தான் பொறுப்பு என்று கடைக்கு முன்பு நோட்டீசை ஒட்டிச் சென்றனர். மிகப்பெரிய நிறுவனமான போத்தீஸ் விதிகளை மீறியது தெரிந்ததும் சட்டப்போராட்டம் நடத்தி அதிகாரிகள் அந்த கடையை மூடியுள்ளனர்.

   உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை நாகர்கோவில் வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போத்தீசை மூடியதன் மூலம் ராமவீரபுரத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.