குழந்தை பாக்கியம் வேண்டுமா? கந்த சஷ்டி விரதம் கடைபிடியுங்கள்!

கந்தப் பெருமான் சூரனைச் சங்கரித்த பெருமையைக் கொண்டாடுவதே ஸ்கந்த சஷ்டி விரத விழாவாகும். சஷ்டி விரதம் இந்த ஆண்டு இன்று முதல் தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி நிறைவடைகிறது.


கந்த சஷ்டிவிரதம், தீபாவளி அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆறாம் நாள் சூரனுக்கு அருளல். கருணை கூர் முகங்கள் ஆறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திரு முருகன் வந்து ஆங்கு, உதித்தனன் உலகம் உய்ய! கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும்.

சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும். இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுஷ்டிக்கின்றனர். 

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ, இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர். இந்த ஆறு நாட்களும் சைவர்கள் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி பூசை வழிபாடு செய்வர். 

முழு முதற் கடவுளாக கலியுகக்கந்தப் பெருமான் போற்றப்படுகின்றார். மனித மனம் விரதத்தின் போது தனித்து விழித்து பசித்து, இருந்து ஆறு வகை அசுத்தங்களையும் அகற்றித் தூய்மையை அடைகின்றது. தூய உள்ளம், களங்கமற்ற அன்பு, கனிவான உறவு என்பவற்றிற்கு அத்திவாரமாக *கந்தசஷ்டி* விரதம் அமைகிறது.

கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மலத்தின் வடிவமாகிய தாரகனையும், அசுர சக்திகளையெல்லாம் கலியுக வரதனான பெருமான் அழித்து, நீங்காத சக்தியை நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும். 

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.