அன்னை காமாட்சியை தரிசிக்க இனி காஞ்சிபுரம் போகவேண்டாம், சென்னையிலே தரிசிக்கலாம் வாங்க!

காஞ்சியிலே காமாக்ஷி எப்படி வீற்றிருக்கிறாளோ, அதே அமைப்பில் சென்னையில் ஒரு காமாட்சி எழுந்தருளி இருக்கிறாள்.


அங்கு காயத்ரி மண்டபத்தில் இருப்பது போலவே நாபித்தூண், வாராஹி, அரூப லக்ஷ்மி, பிள்ளையார், மகாலட்சுமி கருவறைக்கு முன்பு ஸ்ரீசக்ரம் என அனைத்தும் அப்படியே காஞ்சிபுரத்தில் இருப்பது போலவே பார்க்க பார்க்க பரவசம் தரும் ஸ்ரீ காமாக்ஷியின் அழகுக் கோலம்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைச்சர்கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையின் ’விரிவாக்கம்’ என்கிற சாலையில்தான் ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில் உள்ளது. 5 நிலை கோபுரம், பரந்த வெளிப் பிரகாரம், முன்மண்டபம் கோசாலை இத்தனை பரபரப்பான பகுதியில் இப்படியோர் அமைதியான கோயிலா என ஆச்சரியப்பட வைக்கிறது. நிறைய பக்தர்கள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது ஸ்ரீராம் காசி சகோதரர்களால் பராமரிக்கப்படும் தனியார் கோவிலாக ஆசார அனுஷ்டானங்கள் கடுமையாக கடைபிடிக்கப்படும் கோவிலாக விளங்குகிறது. பௌர்ணமி அன்று காலையில் நவாவரண பூஜையும், மாலையில் சந்தனக்காப்புமாக ஜொலிக்கிறாள் அன்னை காமாட்சி.

மகா பெரியவாளிடம் ஸ்ரீராம் குடும்பத்தார் சென்றபோது இங்கே காமாட்சி கோவில் கட்டும்படி உத்தரவானதாம். அம்மனை இக்கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் மஹாபெரியவாளே பூஜித்து வந்திருக்கிறார். இங்கு பிரதிஷ்டை ஆகி கும்பாபிஷேகம் ஆன பிறகும் கோவிலுக்கு விஜயம் செய்திருக்கிறார். ஸ்ரீஜயேந்திரரும், ஸ்ரீவிஜயேந்திரரும் இங்கு விஜயம் செய்திருக்கிறார்கள். இங்கு பிரதிஷ்டை செய்து உள்ள சிறிய பிள்ளையார் என் தாயாரிடம் ரமண மகிரிஷி அளித்தது என்கிறார் ஸ்ரீராம்.

இங்கு ஐந்து நமஸ்காரம், ஐந்து பிரதக்ஷணம், என ஐந்தாக செய்வது ரொம்ப விசேஷம். அமைதியும் அருளும் பொங்கும் இந்த கோயிலை ஒரு பௌர்ணமியில் தரிசித்து தீபமேற்றி அம்மனை வணங்கிட அனைத்து பலன்களும் கிடைக்கும்.