தி.மு.க. கூட்டணி அம்புட்டுத்தானா…? காங்கிரஸுடன் சேர்ந்து கமல்ஹாசன் கூட்டணி முயற்சி

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் போட்டியிட்டு 19 இடங்களை மட்டுமே வென்றது. அதனால் தேஜஸ்வியின் ஆட்சி அமைக்கும் கனவு கலைந்தே போனது.


இந்த விவகாரம் தமிழகத்திலும் எழுந்துவிட்டது. காங்கிரஸை கழட்டிவிடவில்லை என்றால், தி.மு.க.வும் வெற்றிபெற முடியாது என்று பலரும் கருத்து தெரிவிக்கவே, அதற்கு தி.மு.க. தயாராகிவிட்டது.

கூட்டணி கட்சி இப்படி தங்களுக்குக் குழி வெட்டுவது காங்கிரஸ் தரப்பையும் எட்டியுள்ளது. சத்தியமூர்த்தி பவனில் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மேலிட பார்வையாளர் தினேஷ் குண்டுராவ் ’’பீகார் அரசியல் சூழலும், தமிழக அரசியல் சூழலும் வெவ்வேறானவை. தமிழகத்தில் காங்கிரஸ் இன்றைக்கும் உயிர்த் துடிப்போடு இருக்கிறது. எனவே பீகார் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் திமுக முடிவெடுக்குமானால் இழப்பு அவர்களுக்குத்தான். அத்தகைய சூழலில் காங்கிரஸ் தலைமையில் நிச்சயம் மூன்றாவது அணி உருவாகும். இது தொடர்பாக ரகசியமாக சில வேலைகள் நடைபெற்று வருகின்றன’’ என கொளுத்திப் போட்டிருக்கிறார்.

கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து புதிய அணி ஒன்றை அமைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கமல்ஹாசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ராகுல் காந்தி வாழ்த்து சொன்னதை சுட்டிக்காட்டும் காங்கிரஸ் நிர்வாகிகள், இந்த அணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகக் கூறுகின்றனர்.

ஆக மொத்தத்தில் திமுக கூட்டணி விரைவில் டமால்தான்.