கொரோனா ஊரடங்கு..! பொதுமக்களுக்கு சாப்பாடு வழங்க ரூ.10 கோடி வாரி வழங்கிய கல்யாண் ஜூவல்லர்ஸ்!

உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவருக்கு உணவு வழங்குவதற்காக ரூபாய் 10 கோடியை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் தரப்போவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.


உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் நம்முடைய இந்தியா முழுவதும் தன்னுடைய பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் ஆரம்பித்த இந்த வைரஸின் பயணம் தற்போது உலகளாவிய பயணமாக மாறி வருகிறது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறது இந்த கொடூரமான வைரஸ்.

வைரஸின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக நம்முடைய அரசாங்கம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த நாட்களில் அடிப்படைத் தேவைகள் பலவற்றை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் ஏழை எளிய மக்கள் வாடி வருகின்றனர். முறையான சிகிச்சை வழங்குவதற்குத் தேவையான நிவாரண நிதி களையும் மத்திய அரசு திரட்டி வைக்கிறது.

நிவாரண பணிக்காக பலரும் தங்களால் முடிந்த தொகையை அளித்த வண்ணம் உள்ளனர். நாடெங்கும் பல இடங்களில் தங்களுடைய கிளைகளை துவங்கியிருக்கும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நிறுவனத்தின் உரிமையாளரான T.S. கல்யாணராமன் அவர்கள், கொரோனா வைரசால் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்த ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதற்காக ரூபாய் 10 கோடியை ஒதுக்கி இருப்பதாக கூறியிருக்கிறார்.

மத்திய அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவின் பெயரில் கல்யாண் ஜூவல்லரியின் அனைத்து கிளைகளும் தற்போது மூடப்பட்டுள்ளது. தன்னுடைய நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களின் மார்ச் மாத சம்பளம் எந்த ஒரு பிடிப்பும் இன்றி எப்போதும் போல் வழங்கப்படுமென திரு.T.S. கல்யாணராமன் அவர்கள் கூறியிருக்கிறார்.

அவரது இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியிலும் அவரிடம் வேலை பார்க்கும் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.