தேவலோக கல்ப விருஷத்தை தரிசிக்க ஆசையா? பூலோக கற்பக விருட்சம் இதுதான் தெரியுமா?

வேண்டும் வரங்களை அளிக்கவல்லது கல்ப விருக்ஷம் என்னும் மரம்


இது இந்து சமய நம்பிக்கைப்படி தேவ லோகத்தில் இருக்கும் மரமாகும். கல்ப தரு, கல்ப விருக்ஷம், கற்பக விருட்சம் என்றும் அழைக்கப்பெருகிறது. இந்த மரத்தடியில் நின்றுகொண்டு என்ன வேண்டும் என்று நினைத்தாலும் அது உடனே கிடைக்கும் என நம்பினர். பூலோக கற்பக விருட்சம் என்று பனை மரம் அழைக்கப்படுகிறது.

சிவன் கோவில்களில் கல்ப விருக்ஷ வாகனம் பிரபலம். எனினும் சில மகா விஷ்ணு கோவில்களிலும் இந்த வாகனத்தைக் காணலாம். மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உற்சவத்தின் முதல் நாள் இரவன்று தேவி கல்ப விருக்ஷ வாகனத்திலும், ஐயன் புன்னை விருக்ஷ வாகனத்திலும், முருகன் தன் இரு துணைவிமார்களுடன் வேங்கை விருக்ஷ வாகனத்திலும் வலம் வருவார்கள்.

இரண்டு வகையான கல்ப விருக்ஷ வாகனம் உண்டு. ஒன்று பல கிளைகளும் அதன்மீது இலைகளும் கொண்ட மரமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேல் நிஜ இலைகளை அலங்காரமாக வைக்கப்படுவது உண்டு. மற்றொரு வகை வாழை மரத்தைப் போல் ஒரே தண்டுடன் உயர்ந்து நின்று இலைகள் உச்சியியிலிருந்து விரித்து வருவது போல் அமையப் பெற்றிருக்கும்.

நமது புராணங்களில் தேவலோகத்து மரம் என்று மந்தாரை, பாரிஜாதம், சந்தனம் ஹரிசந்தனம் மற்றும் கல்ப விருக்ஷம் என ஐந்து வகை மரங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சில புராணங்கள் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசேஷமான பொருட்களில் இதுவும் ஒன்று என கூறுகின்றன.

சிவபெருமானின் வசிப்பிடமான கயிலாயத்தில் உள்ள தோட்டத்தின் பெயர் கல்பகா என்பது குறிப்பிடத்தக்கது. திருமங்கையாழ்வார் இமாலயத்தில் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான பத்ரியைப் பற்றி விவரிக்கும் போது இந்த விருட்சத்தைக் குறிப்பிடுகிறார்.