கலைஞர் டிவியில் பழைய ஊழியர்களுக்குக் கட்டாயக் கல்தா? ஸ்டாலின் அராஜகம் ஆரம்பம்!

கலைஞர் தொலைக்காட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் வேலைகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. விஜய் டி.வி.யில் இருந்து நீயா நீனா அந்தோணி உட்பட பலர் வந்து கலைஞர் டி.வி.யை பளபளப்பாக வேலை செய்து வருகிறார்கள்.


கலைஞர் தொலைக்காட்சிக்கும் வருமான வரித்துறைக்கும் இருக்கும் பிரச்னையில் சேனல் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதால், கதிர் டி.வி. என்று தொடங்கவும் ஆலோசனை நடந்துவருகிறது. இதுவெல்லாம் சாதாரண விவகாரம்தான்.

இதற்காக ஏராளமான நபர்களை புதிதாக பணிக்கு எடுத்திருக்கிறார்கள், சம்பளமும் அதிகம். இதுவும் வரவேற்கத்தக்க விவகாரம்தான் ஆனால், ஏற்கெனவே கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றும் பழைய ஊழியர்கள் அனைவரிடமும் ராஜினாமா கடிதம் வாங்கியிருப்பதுதான் அதிர வைக்கிறது.

இதுகுறித்து கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு ஊழியரின் புலம்பல் இது.

கலைஞர் டிவி தொடங்கப்பட்ட போது தலைமை நிருபராக பொறுப்பில் இருந்தவர் கண்ணன். ஒரு விபத்தில் கண்ணனுடைய மனைவி இறந்து விட்டார். தோழர் கண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சில பத்திரிகையாளர்கள் உதவி செய்தார்கள். நம்முடைய தோழர் கண்ணன் அவர்களை கலைஞர் டிவி நிர்வாகம் நிர்ப்பந்தப்படுத்தி ராஜினாமா செய்யச் சொல்கிறது. அதைத் தொடர்ந்து அவர் ராஜினாமா கடிதமும் கொடுத்துவிட்டார். 

இதைத்தொடர்ந்து கலைஞர் டிவி பணியாளர்களுக்கும், இணைய ஆசிரியர்கள் மற்றும் துணை ஆசிரியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு முன்பு பணியில் இருந்தவர்களை விட இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வெளியேற்றும் முயற்சியை கலைஞர் டிவி நிர்வாகம் எடுத்து வருகின்றது. அனைவரிடமும் ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டது. திடீரென எங்களை பணி நீக்கம் செய்துவிட்டால் எங்கள் குடும்பத்தின் கதி என்னவாகும்?  120 குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்த ஸ்டாலின் தயாராகிவிட்டார். 

இந்த அராஜகத்தைத் தட்டிக்கேட்க யாரும் இல்லையா? ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி செய்யும் ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வாரோ…?