காடுவெட்டி குரு மகள் காதல் திருமணம்! மிரட்டல் வருவதாக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பரிதாபம்!

காடுவெட்டி மகள்

 மாவீரன் என்று அழைக்கப்படும் காடுவெடி குருவின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டு தங்களுக்கு மிரட்டல் வருவதாக கணவருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

   பாட்டாளி மக்கள் கட்சியின் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர் காடுவெட்டி குரு. வன்னியர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து மாவீரன் என அனைவராலும் அழைக்கப்பட்டவர். இவர் கடந்த மே மாதம் உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் குருவின் மகள் விருதாம்பிகை தனது அத்தை மகன் மனோஜை காதலித்து வந்துள்ளார். தந்தையின் மறைவுக்கு பிறகு விருதாம்பிகை தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.

   விருதாம்பிகை – மனோஜ் காதலை ஏற்று அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க குருவின் தாயாரும் மணமக்களின் பாட்டியும் முடிவு செய்துள்ளார். ஆனால் மகளின் காதலுக்கு குருவின் மனைவி லதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மனோஜை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விருதாம்பிகையை அவரது தாய் லதா வலியுறுத்தி வந்துள்ளார்.

   இந்த நிலையில் கும்பகோணம் அருகே உள்ள கோவிலில் விருதாம்பிகை தனது அத்தை மகன் மனோஜை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இந்த திருமணத்தில் மனோஜின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தவிர விருதாம்பிகையின் சகோதரர் கனலரசனும் திருமணத்தில் கலந்து கொண்டார். ஆனால் விருதாம்பிகையின் தாய், பாட்டி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்கவில்லை.

   இந்த நிலையில் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், திருமணம் செய்து ஊருக்கு சென்ற போது தங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் கூறி மனோஜ் தனது மனைவியும் குருவின் மகளுமான விருதாம்பிகையுடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். மாவீரன் என்று அழைக்கப்பட்ட குருவின் மகள் தனக்கு பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

•••••••••

More Recent News