ராமதாசால் என் மகன் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது..! கதறி அழும் தாயார் கல்யாணி அம்மாள்!

பாமக நிறுவனர் ராமதாசால் காடுவெட்டி குருவின் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிட்டது என்று கூறி அவரது தாயார் கதறி அழும் வீடியோ வன்னியர்கள் மற்றும் பாமகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காடுவெட்டி குருவின் 2வது ஆண்டு நினைவு தினத்தன்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்துவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் குருவின் மகன் கனலரசன், மருமகன் மனோஜ், மற்றும் மூத்த மருமகன் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து கதறியபடி காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியிருப்பதாவது, கட்சி கட்சின்னு சொல்லி என் மகன் குருவை அழிச்சிட்டீங்க. இப்போ, என் குடும்பத்தையும் அழிக்க பாக்குறாங்க. பிரச்னை நடந்த இடத்துல என்னோட பேரனை (குருவின் மகன்) வெட்டுங்கடான்னு சொல்லிச் சொல்லி வெட்ட முயற்சி செஞ்சிருக்காங்க” என அழத்தொடங்கிறார். அழுகையைத் தேற்றிக்கொண்டு, ``இந்தக் கிராமத்தையே எங்களுக்கு எதிரா திருப்பி நிறுத்தி வச்சிருக்காங்க.

கட்சிக்காக உழைத்த என் மகனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இந்த நிலைமையா? வன்னியர் சங்கத்துக்காக போராடிய என் மகனின், குடும்பமே இன்று நடுத்தெருவில் நிற்கிறது. இதைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா? நாங்க உங்களிடம் (ராமதாசிடம்) எந்தப் பிரச்னைக்கும் வரமாட்டோம். எங்களை நிம்மதியா வாழவிடுங்க” எனக் கண்ணீருடன் கதறும், வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.