அடியாட்களை ஏவுகிறார்! கொலை மிரட்டல் விடுக்கிறார்! ராமதாஸ் மீது காடுவெட்டி குரு தாயார் பகீர் புகார்!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தன்னையும், தனது குடும்பத்தை சேர்ந்தவர்களையும் அடியாட்களை வைத்து மிரட்டுவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார் காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள்.


காடுவெட்டி குருவை மறைவை தொடர்ந்து அவரது குடும்பம் இரண்டாக உடைந்துள்ளது. காடுவெட்டி குருவின் தாயார் ஒரு தரப்பாகவும், காடுவெட்டி குருவின் மனைவி ஒரு தரப்பாகவும் இருக்கின்றனர். இவர்களில் காடுவெட்டி குருவின் மனைவி ராமதாஸ் தரப்புடன் சுமூக உறவுடன் உள்ளார். ஆனால் காடுவெட்டி குருவின் தாயாரோ பா.ம.கவினர் என்றால் எரிந்து எரிந்து விழுகிறார்.

   தனது மகன் மரணத்திற்கு காரணமே பா.ம.க தான் என்று கல்யாணி அம்மாளி கூறி வருகிறார். மேலும் தனது மகனுக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை கடன் இருப்பதாகவும், அதற்கு காரணம் பா.ம.க தான் என்றும் கல்யாணி அம்மாள் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் பா.ம.க சார்பில் காடுவெட்டி குருவுக்கு அவரது சொந்த ஊரான காடுவெட்டியில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

   இந்த விழாவில் காடுவெட்டி குருவின் மனைவி மட்டுமே கலந்து கொண்டார். காடுவெட்டி குருவின் தாயார் உள்ளிட்டோர் வரவில்லை. இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காடுவெட்டி குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.கவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட வழுவூர் மணிகண்டன் என்பவர் இந்த நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். காடுவெட்டி குருவின் தாயாருக்கு உதவி செய்த காரணத்தினால் தான் மணிகண்டன் பா.ம.கவில் இருந்து நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

   இந்த நிலையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற காடுவெட்டி குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவரது தாயார் கல்யாணி அம்மாள் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கல்யாணி அம்மாள் கூறியதாவது: காடுவெட்டியில் குருவுக்கு மணிமண்டபம் கட்டப்போகிறார்களாம். முதலில் காடுவெட்டி குருவுக்கு இருக்கும் ஒன்றரை கோடி ரூபாய் கடனை அடைக்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உதவி செய்ய வேண்டும்.

   பா.ம.கவிற்காக தனது உயிரையே கொடுத்த காடுவெட்டி குருவின் கடனை முதலில் அந்த கட்சியினர் அடைக்க வேண்டும். அதன் பிறகு குருவுக்கு அவர்கள் மணிமண்டபம் கட்டலாம். மணிமண்டபம் கட்டப்போவதாக என்னிடம் சிலர் கூறினார், அதற்கு குருவின் கடனை முதலில் அடையுங்கள் என்று சொன்னேன். அப்போது முதல் எனக்கு பா.ம.க நிறுவனர் ராமதாசிடம் இருந்து மிரட்டல் வருகிறது. ராமதாஸ் எங்கள் குடும்பத்தினர் மீது அடியாட்களை ஏவியுள்ளார்.

   பா.ம.கவுடனான தொடர்பு எனது மகனுடன் முடிந்துவிட்டது. தற்போது அந்த கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் எங்களுக்கு சிலர் உதவி செய்ய முன்வருகிறார்கள். அவர்களை கட்சியில் இருந்து பா.ம.க நீக்குகிறது. இப்படி எங்களுக்கு எதிராக இருக்கும் பா.ம.க எப்படி என் மகன் பெயரை பயன்படுத்தலாம். இனி ராமதாஸ் எனது மகன் பெயரை பயன்படுத்த கூடாது.

   இவ்வாறு காடுவெட்டி குருவின் தாயார் கல்யாணி அம்மாள் தெரிவித்துள்ளார். முன்னதாக காடுவெட்டி குருவின் சகோதரி ராமதாஸ் மீது பரபரப்பு புகார் தெரிவித்தார். தற்போது குருவின் தாயாரே ராமதாசுக்கு எதிராக புகார் கிளப்பியுள்ளார். இதனால் பா.ம.க வட்டாரங்களில் சலசலப்பு நிலவுகிறது.