பெண்களை ஏமாற்றி நடைபெறும் நாடகக் காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்வரை ஓயமாட்டோம் என காட்டுவெட்டியின் குருவின் மகன் கனலரசன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
மாவீரனின் மஞ்சள் படை..! புதிய அமைப்பு மூலம் பாமகவிற்கு அதிர்ச்சி அளித்த காடுவெட்டி குரு மகன் கனலரசன்! வடமாவட்ட டென்சன்!
காலமான காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மற்றும் மகள் ஆகியோர் `மாவீரனின் மஞ்சள் படை' என்ற இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கனலரசன் தெரிவிக்கையில், எதற்காக "இந்த அமைப்பு வன்னிய சமுதாய மக்களுக்காக தொடங்கவில்லை. ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கத்தான் தொடங்கியிருக்கிறோம்.
என் அப்பாவுக்கு மாவீரன் என்று பெயர் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை. பா.ம.க மேடைகளில் கடுமையான வார்த்தைகளால் அவர் பேசியதால் கிடைத்த பெயர் அல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீதியில் இறங்கிப் போராடியவர். 128 வழக்குகளை சந்தித்தவர். ஒரே ஒரு வழக்கு மட்டும்தான் சொந்த பிரச்னைக்காக அவர் மீது பதியப்பட்டது.
மற்ற அனைத்து வழக்குகளும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான். என் அப்பாவை பட்டியலின மக்களின் விரோதிகள் போலச் சித்திரித்துள்ளார்கள். ஆனால், அவர் ஏராளமான பட்டியலின மக்களின் குடும்பங்களை வாழ வைத்திருக்கிறார். அவரை ஆதரித்த பல சமுதாய தலைவர்களும் எங்களுடன் பயணிக்க பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடன் சேர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நன்மை செய்வோம் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி என்னுடைய தந்தையின் நோக்கம், நாடகக் காதலை எதிர்ப்பதுதான். ஒரு பெண்ணை காதல் என்ற போர்வையில் நாடகம் ஆடி அழைத்துச் செல்கிறது ஒரு கூட்டம். அத்தோடு அந்தப் பெண்ணை தவறான முறையில் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் எடுத்துக்கொண்டு அந்தக் குடும்பத்தாரிடம் பணம் பறிக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.
இப்படி நடக்கும் நாடகக் காதல் முற்றுபெறும் வரையிலும் நாங்கள் விடப்போவதில்லை என்று தெரிவித்தார் கனலரசன். காடுவெட்டி குருவின் மகன் புதிய அமைப்பு ஆரம்பித்துள்ளது பாமகவிற்குள் புதிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கனல் அரசனை அழைத்து ராமதாஸ் சமாதானம் செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்காத காரணத்தினால் தற்போது புதிய அமைப்பை தொடங்கியுள்ளாராம்.