கே.எஸ்.அழகிரிக்கு நாங்குநேரி ஆப்பு...! கராத்தேக்கு அடுத்து சிவகுமாருக்கும் நோட்டீஸ்! காங்கிரஸ் கலாட்டா!

தோழமைக் கட்சி என்பதெல்லாம் சும்மா, நாங்கள் அடிமைக் கட்சி என்று காங்கிரஸ் தலைகுப்புற பல்டி அடித்த நிகழ்வு தமிழக அரசியலில் சிரிப்பாய் சிரிக்கிறது. தி.மு.க. கொடுத்த குட்டு காரணமாக உடனடியாக நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பி விசுவாசத்தைக் காட்டியுள்ளார் அழகிரி.


கடந்த 6ம் தேதி நாங்குநேரியில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் மேலிட பார்வையாளர் சஞ்சய் தத், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் மாஜி மாவட்டத் தலைவர் மோகன்குமாரராஜா பேசியபோது, நாங்குநேரியை காங்கிரஸ் கேட்டு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்துப் பேசிய சிலரும் அதேபோன்று பேசினார்கள். கடைசியாகப் பேசிய அழகிரி, ‘‘இது தேர்தல் ஆலோசனைக்கூட்டம் அல்ல, அதனால் இப்போது அது பற்றி பேச வேண்டாம்’’ என்று நழுவிக்கொண்டார். அந்த நேரம், மாவட்டத் தலைவர் சிவகுமார், ‘நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்கிற தீர்மானத்தை எழுதி சத்தமில்லாமல் பத்திரிகையாளர்களிடம் விநியோகமும் செய்தார். 

இந்தத் தீர்மானம்தான் அழகிரிக்கு ஆப்பு வைத்திருக்கிறது. தி.மு.க. மேலிடத்தில் இருந்து அழகிரிக்கு போன் செய்து, நாங்குநேரில் தீர்மானம் நிறைவேற்றி அதை விநியோகம் செய்தீர்களாமே, எங்களிடம் அந்த பிரதி இருக்கிறது என்று வாட்ஸ் ஆப்பில் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அம்புட்டுத்தான். அலறிவிட்டாராம் அழகிரி. சிவகுமார் ஏதோ நோட்டீஸ் கொடுக்கிறார் என்றுதான் அமைதியாக இருந்தேன். இதோ அவருக்கு நோட்டீஸ் அனுப்புகிறேன் என்று கடிதம் அனுப்பிவிட்டார். ஏற்கெனவே கராத்தேவை அனுப்பியாச்சு, இப்ப சிவகுமாரா...? கலக்குறே அழகிரி.