திடீரென கழன்று ஓடிய டயர்..! நெடுஞ்சாலையில் குடை சாய்ந்த KPN நிறுவன பஸ்..! அலறிய பயணிகள்..! ஆனால் டிரைவர்? பகீர் சம்பவம்!

கரூர்: ஓடிக் கொண்டிருந்த பேருந்தில் இருந்து டயர் கழண்டு விழுந்ததால் பயணிகள் பீதி அடைந்தனர்.


தமிழகம் முழுக்க இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள், பயணிப்பதற்கு சொகுசாக இருந்தாலும், கட்டணக் கொள்ளை, ஓட்டை, ஒடிசல் பேருந்துகளை இயக்குவது என ஏராளமான புகார்களுக்கு ஆளாகியுள்ளன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, கரூரில் ஒரு திகில் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆம், கரூரில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்டுச் சென்ற கேபிஎன் நிறுவனத்தின் ஆம்னி பேருந்து ஒன்றின் முன்பக்க டயர் திடீரென மண்மங்கலம் பகுதியில் சென்றபோது கழண்டு விழுந்துவிட்டது.

சாலையோரம் இருந்த ரேஷன் கடையில் அந்த டயர் இடித்துக் கொண்டு விழுந்தது. இதைப் பார்த்து பயணிகள் உள்பட சாலையோரம் இருந்த பொதுமக்களும் கடும் பீதி அடைந்தனர். அடுத்த சில நொடிகளில் பேருந்து அப்படியே ஒருபக்கமாக கவிழ தொடங்கியது. ஆனாலும், டிரைவர் சாமர்த்தியமாக பேருந்தை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, பயணிகளின் உயிரை காப்பாற்றினர்.

இதில், 20க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். நடுவழியில் ஏற்பட்ட இந்த விபரீதத்தால் செய்வதறியாது திகைத்த பயணிகளை, பிறகு வேறு ஒரு பேருந்தில் ஏற்றி, அனுப்பி வைத்தனர்.