RCB யின் வெற்றியில் மண்ணை வாரி போட்ட சிக்ஸர் மன்னன் ரஸ்ஸல்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ipl போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பார்திவ் படேல் மற்றும் கோஹ்லி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். பார்திவ் படேல் 25 ரன்களுக்கு வெளியேற, கேப்டன் கோஹ்லியுடன் டீ வில்லியர்ஸ் இணைந்தார். இவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். 

எதிரணியின் பந்து வீச்சாளர்களால் இவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை. சிறப்பாக விளையாடிய கேப்டன் கோஹ்லி 49 பந்துகளில் 84 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டீ  வில்லியர்ஸும் சிறப்பாக விளையாடி 32 பந்துகளில் 63 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் களமிறங்கிய மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார் . இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205  ரன்களை எடுத்தது. 

 பின்னர் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரைன் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் ராபின் உத்தப்பா மற்றும் கிறிஸ் லின் இனைந்து ரன்களை வேகமாக உயர்த்தினர்.சிறப்பாக விளையாடிய லின் 43 ரன்களுக்கும் , உத்தப்பா 33 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.நிதிஷ் ராணா 37 ரன்களுக்கு வெளியேற ஒரு நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தோல்வியின் விளிம்பில் இருந்தது.

3 ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான நிலையில் களமிறங்கிய ரஸ்ஸல் பெங்களூரு அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார்.இவர் 13 பந்துகளில் 7 சிக்ஸர்கள் அடித்து 48 ரன்களை விளாசினார்.இதனால் கொல்கத்தா அணி 19.1 ஓவர்களுக்கு இலக்கை எட்டியது. எளிதாக வெல்லவேண்டிய போட்டியில் பவுலர்களால் பெங்களூர் அணி எதிர்பாராத தோல்வியை தழுவியது.