காதலரை மாற்றிய விவகாரம்! பிக் பாஸ் ஜூலி கொடுத்த புதிய விளக்கம்!

சென்னை: உண்மையான பாய்ஃபிரெண்ட் யார் என்று ஜூலி மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் விளக்கம் அளித்துள்ளார்.


உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை மெரினா கடற்கரை முற்றுகையில், பங்கேற்ற லட்சக்கணக்கான மக்களில், ஜூலியும் ஒருவர். அங்கே கோஷமிட்டதன் மூலமாக, மக்கள் கவனத்தை ஈர்த்த ஜூலி, அதை வைத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பை பெற்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின், அவர் தமிழகம் முழுவதும் அறியப்படும் நட்சத்திரமாக மாறிவிட்டார். அத்துடன்,ஓரிரு சினிமா படங்களிலும் நடிக்க ஜூலி ஒப்பந்தமாகியுள்ளார். இதன்படி, சமீப காலமாக, மார்க் ஹம்ரன்  என்பவரை தனது ஆண் நண்பர் எனக் கூறி, அவருடன் படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் ஜூலி கூறிவந்தார்.

ஆனால், திடீரென மார்க் ஹம்ரன் பெயரை கைவிட்ட அவர், தற்போது ரஜிதிபரான் என்பவருடன் நெருக்கமாகப் பழகி வருகிறார். இவர்கள் 2 பேரும் ஒன்றாக ரெஸ்டாரன்ட், ஷாப்பிங் மால் செல்லும் புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரஜிதிபரான் தனது புதிய ஆண் நண்பர் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், யார்தான் உண்மையான ஆண் நண்பர் என்று ஜூலியை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்தனர். இதையடுத்து, அவர்களுக்கு பதில் அளித்துள்ள ஜூலி, ''எனது பாய் ஃபிரெண்ட் ராஜிதிபரான் அல்லது மார்க் ஹம்ரனா என்ற கேள்வி எழுந்துள்ளது.

யாரும் குழம்ப வேண்டாம். இரண்டு பேருமே ஒரே ஆள்தான். மார்க் ஹம்ரன்தான் தற்போது ராஜிதிபரான் என்று அவரது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார்.

அத்துடன், தாடி மற்றும் நீண்ட தலைமுடியை அவர் வெட்டிக் கொண்டதால், தோற்றம் மாறிவிட்டது. நாங்கள் 2 பேரும், எழில் சார் இயக்கும் புதிய படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளோம்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.