சென்னைச் சிறுமிக்கு பாலின வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..! குற்றவாளிகள் 15 பேருக்கு என்ன தண்டனை..?

சென்னை அயனாவரத்தில் சிறுமி ஒருவர் பாலின வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில், 15 பேரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.


அயனாவரத்தில் உள்ள அடுக்ககக் குடியிருப்பில் 2018-ல் சிறுமி ஒருவரை அங்கு பணியாற்றிய காவலாளி உள்பட 17 பேர் பாலினவன்கொடுமை புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் அனைவர் மீதும் குழந்தைகள் மீதான பாலின வன்முறை தடுப்புச் சட்டமான- போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் மீது குண்டர் சட்டமும் ஏவப்பட்டது. ஆனால், 2019 ஜனவரி 11 அன்று குண்டர் சட்டக் கைது செல்லாது என தள்ளுபடியானது.  

ஓராண்டுக்கு முன்னர் அவ்வழக்கு விசாரணை மகளிர் நீதிமன்றத்தில் தொடங்கியது. கடந்த டிசம்பரில் விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இடையில் இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 

போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா இன்று முற்பகல் தீர்ப்பை அளிப்பதற்கு முன்னர், 15 பேரை குற்றவாளி என்று அறிவித்தார். தோட்டக்காரர் குணசேகரன் மட்டும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். முன்னதாக, குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததால், மற்றவர்கள் மீதே வழக்கு விசாரணை நடத்தப்பட்டது, நினைவுக்கு உரியது.