உள்ளாடை ஷோரூமில் பெண் பத்திரிகையாளர் உடை மாற்றும் வீடியோ! கடை உரிமையாளருக்கு போலீஸ் வலை!

27 வயது ஊடகவியலாளர் உடைமாற்றும் போது வீடியோ எடுக்கப்பட்ட சம்பவமானது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் 27 வயது மதிக்கத்தக்க பிரபல ஊடகவியலாளர் வசித்து வருகிறார். கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள பிரபல உள்ளாடை கடைக்கு சென்ற மாதம் 31-ஆம் தேதியன்று சென்றுள்ளார். அங்கு சில உள்ளாடைகளை தேர்ந்தெடுத்த பின்னர் உடைமாற்றும் அறைக்கு செல்வதற்காக வழி கேட்டுள்ளார்.

அங்க வேலை பார்க்கும் ஒரு பெண் ஒரு அறைக்கு செல்வதற்காக வழிகாட்டியுள்ளார். உள்ளே சென்று உடைமாற்ற தொடங்கிய சில  நிமிடங்களிலேயே, வழிகாட்டிய பெண் அவரை வெளியே அழைத்து வேறொரு அறைக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

ஏன் என்று கேட்டதற்கு, பணியாற்றும் பெண் அந்த அறையில் கேமரா இருப்பதாக கூறியுள்ளார். உடனே பயந்த அந்த ஊடகவியலாளர் கடை உரிமையாளரிடம் சென்று கேமரா இருக்கும் அறைக்கு தன்னை ஏன் உடை மாற்ற அனுப்பியதாக கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

மேலும் அந்த ஊடகவியலாளர் 3 நாட்கள் கழித்து கிரேட்டர் கைலாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஊடகவியலாளர் புகார் அளித்ததை தெரிந்தவுடன் கடையின் உரிமையாளர் அந்த வீடியோவை டெலிட் செய்துள்ளார். 

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.