தம்பதியருக்குள் அடிக்கடி சண்டையா? ஜோதிபா கோயிலுக்குப் போனால் குறை எல்லாம் தீர்ந்துபோகும்!

கோலாப்பூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் மலைகளின் நடுவே ஒரு சிறு மலை மீது உள்ளது ஜோதிபா என்கிற கேதாரேஸ்வரர் சிவன் கோவில்.


விஷ்ணுவிடம் கோபித்துக்கொண்டு லக்ஷ்மி பூலோகம் வந்ததும் லக்ஷ்மியை தேடி விஷ்ணுவும் பூலோகம் வந்து இருவரும் இங்கு திருமணம் புரிந்து கொண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீ விஷ்ணு லக்ஷ்மி திருமணத்தை இந்த கேதாரேஸ்வரரே நடத்தி வைத்திருக்கிறார். ஸ்ரீ விஷ்ணுவை திருமணம் புரியும் வரை கோலாப்பூர் மகாலட்சுமிக்கு பாதுகாவலராக இருந்தவரும் கேதாரேஸ்வரர்தான்.

கோலாசுரனுடன் போரிட கிளம்பிய மகாலட்சுமிக்கு ஆயுதங்களையும் ஆசியையும் வழங்கியவர் இந்த சிவன்தான். எனவே மகாலட்சுமியே தரிசித்தப் பிறகு கண்டிப்பாக ஜோதிபாவையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அந்த மலையின் படிகளில் ஏறி உள்ளே நுழைந்தால் முழுவதும் கருங்கல்லால் ஆன அழகிய கோவில் தென்படுகிறது. கோட்டையின் ஒரு பகுதியில் கட்டப் பட்டுள்ளதாகத் தெரிகிற கோயில் அப்படியே மகாலட்சுமி கோயிலின் சிறு பிரதியாக உள்ளது. வாயிலில் மன்னன் சிவாஜியின் சிலாரூபம் உள்ளது.

கருவறைக்குள் சிவபெருமான் தலையில் தலைப்பாகை, பெரிய முறுக்கு மீசை, பட்டு வேட்டி சட்டையுடன் வீற்றிருக்கிறார். இங்கு தினமும் இரு வேளைகள் பூஜை நடைபெறுகின்றன. சிவபெருமானுக்கு அருகில் கோலாப்பூர் மகாலட்சுமியின் சிறிய சிலாரூபம் உள்ளது.

பக்தர்கள் பயபக்தியுடன் நின்று ஜோதிபாவை வழிபடுகிறார்கள். தம்பதியருக்குள் வரும் பிணக்கை இவர் தீர்த்து வைப்பதால் புதுமணத் தம்பதியர் இங்கு வந்து இவரை தரிசித்து நிதானமாக நின்று ஆரத்தி காட்டி வழிபடுகிறார்கள். கருங்கல் தரை, கோவிலின் சுவர், கல் தூண்கள், தீபஸ்தம்பங்கள் எங்கும் சிகப்பு மற்றும் ரோஸ் நிறத்தில் குங்குமம் சிந்திக்கிடக்கிறது.

எல்லா விசேஷங்களிலும் வழிபாடுகளிலும் பக்தர்கள் இங்கே பல நிறத்தில் குங்குமத்தைத் தூவி வழிபடுவதைப் பார்க்கலாம் இந்த கோயிலில் ஒரு இடத்தில் சிவாஜியின் சிம்மாசனம் வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் சிவாஜி தங்கியிருந்திருக்கிறார் என்கிறார்கள்.

ஒரு இடத்தில் ஒரு பெரிய பசுவின் சிலையை வைத்து அதனுடைய மடியிலிருந்து நீர் விழும் வகையில் அமைத்திருக்கிறார்கள். பக்தர்கள் இந்த நீரை தங்கள் தாகம் தணிக்க பயன்படுத்துகிறார்கள்.