ஜெயலலிதா பங்களா மக்களுக்குத்தான்... நினைவில்லத்தை திறந்துவைத்து கெத்து காட்டிய எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா வாழ்ந்த போய்ஸ் இல்லத்தை சசிகலா தொடங்கி தீபக், தீபா ஆகியோர் சொந்தம் கொண்டாடி நீதிமன்றத்துக்குப் போயிருக்கும் நிலையில், ஜெயலலிதா வாழ்ந்த வீடு பொதுமக்கள் பார்வைக்கு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதனை சாதித்துக் காட்டியிருக்கிறார்.


ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவருடைய 'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்றவேண்டும் என்ற பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அவ்வாறு நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்தார். இதையடுத்து, ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், இன்று காலை 10.30 மணிக்கு வேதா நினைவு இல்லம் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில், எடப்பாடி பழனிச்சாமி வேதா இல்லத்தை ரிப்பன் வெட்டியும் நினைவு இல்ல கல்வெட்டினையும் திறந்துவைத்தார். 

வேதா இல்லத்துக்குப் போனால் என்னவெல்லாம் பார்க்கலாம் தெரியுமா? 'வேதா நிலையம்' 10 கிரவுண்டு (24 ஆயிரம் சதுர அடி) பரப்பளவில் 3 மாடிகளுடன் அமைந்துள்ள வீடு ஆகும். அங்கு நகரும் வகையிலான 32 ஆயிரத்து 721 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் மற்றும் 394 நினைவுப்பொருட்களும் அடங்கும்.

இங்கு 4 கிலோ 372 கிராம் எடை கொண்ட 14 வகையான தங்க நகைகளும், 601 கிலோ 424 கிராம் எடையுள்ள 867 வெள்ளிப் பொருட்களும், வெள்ளிப் பாத்திரங்களும் உள்ளன. சினிமா, அரசியல் என ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையிலான பிளாக் அன்டு ஒயிட்அரிய புகைப்படங்கள்,

அவர் பயன்படுத்திய பொருட்கள், ஜெயலலிதாவின் ஆளுமையைப் பிரதிபலிக்கும் பொருட்கள், அவர் படித்த புத்தகங்கள், நினைவுப்பொருட்கள், அவர் பயன்படுத்திய தனிப்பட்ட பொருட்களும் நினைவு இல்லத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜெயலலிதா பயன்படுத்திய பூஜை அறையும் தயார் படுத்தப்பட்டுள்ளது. 

இப்போது வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட முடியாது என்றாலும், விரைவில் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் உறுதி அளித்திருக்கிறார்.

அதனால், எல்லோரும் ஜெயலலிதா இல்லத்தை விரைவில் பார்க்கலாம்.