பவாரியா கொள்ளையர்களை ஓட ஓட விரட்டிய நிஜ தீரன் ஜாங்கிட்! இன்றோடு காக்கிச் சட்டையை கழட்டி வைத்தார்!

தீரன் அதிகாரம் ஒன்று படம் பார்த்திருப்பீர்கள். வெளிமாநிலத்துக்குச் சென்று கொள்ளைக்கார கும்பலை கட்டி இழுத்துவரும் கதை அது.


அது அத்தனையும் நிஜம், அப்படி நிஜ ஹீரோவாக நடித்தவர்தான் ஜாங்கிட். ஏ.எஸ்.பி., எஸ்.பி., டி.ஐ.ஜி. வடக்குமண்டல ஐ.ஜி என தான் வகித்து வந்த அத்தனை காவல்துறை பதவிகளிலும் தனி முத்திரை பதித்தவர் ஜாங்கிட் ஐ.பி.எஸ். அவர்தான் இன்று அதாவது ஜூலை 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்..

1985ம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியான ஜாங்கிட், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் முதன்முதலாக 1985ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏ.எஸ்.பி.யாக பணி அமர்த்தப்பட்டார். ஜாதிக்கலவரம், வெட்டு, குத்து என்று நிகழ்ந்துகொண்டிருந்த தென் மாவட்டத்தை அமைதிப்படுத்தினார் ஜாங்கிட்.

அதேபோன்று, வடக்கு மண்டல, ஐ.ஜி.,யாக இருந்தபோது, 2001ல் தமிழகத்தில் ஊடுருவி, கும்மிடிப்பூண்டி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, சுதர்சன் உள்ளிட்டோரை கொலை செய்த, உ.பி., மாநில பவாரியா கொள்ளை கும்பலை ஒழித்தார். இதுதான் தீரன் அதிகாரம் திரைப்படமாக வந்தது. சென்னை கூடுதல் கமிஷனர் மற்றும் புறநகர் கமிஷனராக பணிபுரிந்தபோதுதான் ஜாங்கிட்டின் வீரதீரம் வெளியே தெரிந்தது. ஆம்,  ரவுடிகள், ‘பங்க்’ குமார், வெள்ளை ரவி ஆகியோரை என்கவுன்டர் செய்து மக்கள் அச்சத்தைப் போக்கினார். இப்போது கும்பகோணம் போக்குவரத்து விஜிலென்ஸ் அதிகாரியாக உள்ள ஜாங்கிட், இன்று பணி ஓய்வு பெற்றார்.

இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். ஓய்வு பெற்றபிறகு, அவரது சொந்த ஊரில், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பயிற்சி மையங்கள் துவங்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் ஜாங்கிட். வாழ்த்துக்கள் சாரே...