பஞ்ச பூதங்களில் நீருக்கு உரிய சிவபெருமான் திருத்தலம் இதுதான்! வற்றாத செல்வம் வழங்கும் ஆலயம்!

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள காவேரி ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மாபெரும் சிவன் கோவில் நகரமாகும்.


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும். 

புராண காலத்தில் வெண் நாவல் மரங்கள் நிறைந்த காடாக இப்பகுதி இருந்தது. இக்காட்டில் ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. கைலாயத்தில் சிவனுக்கு சேவை செய்த சிவகணங்களான புட்பதந்தன், மாலியவான் என்ற இருவர் தங்களில் யார் அதிகமாக சிவ சேவை புரிகிறார்கள்  என்பதில் போட்டி வந்தது.

ஒரு கட்டத்தில் இருவருக்கும் இதுவே பிரச்னையாகி, ஒருவரையொருவர் சிலந்தியாகவும், யானையாகவும் பிறக்கும்படி சபித்துக் கொண்டனர். இதனால் மாலியவான் சிலந்தியாகவும், புட்பதந்தன் யானையாகவும் பிறந்தனர். இவ்விருவரும் இத்தலத்தில் சிவனை வழிபட்டனர். இதிலும் இவர்களிருவருக்கும் போட்டி உண்டானது.  

சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் பாதுகாத்தது. யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது.

யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும். தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. 

இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறு பிறவியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது.

பூர்வஜென்ம வாசனையால் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாதபடி குறுகலான படிகளைக் கொண்ட கட்டுமலைமீது சிவலிங்கம் ஸ்தாபித்து 70 கோவில்கள் கட்டினான். அக்கோயில்கள் யாவும் மாடக்கோயில் என்று அழைக்கப்படுகின்றன. கோச்செங்கட் சோழன் கட்டிய முதல் மாடக்கோவில் திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் கோயிலாகும். இம்மன்னனுக்கு இங்கு சன்னதி இருக்கிறது.  

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள். 

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது.

( “ஊஞ்சல் மண்டபம், வசந்த மண்டம், நூறு கால் மண்டம், நவராத்திரி மண்டபம், சோமஸ்கந்தர் மண்டபம்”) அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது.

தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். 

திருவானைக்கா அன்னை அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலம். அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள். 

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான இக்காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது. அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். 

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது. 

மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்று வரலாறு கூறுகிறது.