முஸ்லீம் நபரின் சடலத்தை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு..! இந்துக்கள் ஒன்று கூடி இறுதிச்சடங்குகள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

கார்வா: ஜார்க்கண்ட்டில் முஸ்லீம் மக்களால் புறக்கணிக்கப்பட்ட நபரை இந்துக்கள் ஒன்று சேர்ந்து அடக்கம் செய்த நிகழ்வு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்திய மக்களை ஒன்றிணைக்கும் தாரக மந்திரமாகும். அப்படிப்பட்ட நிலையில் சமீபகாலமாக, மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தக்கூடிய விரும்பத்தகாத நிகழ்வுகள் நாடு முழுவதும் நடைபெற தொடங்கியுள்ளன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், கார்வா மாவட்டத்தில் உள்ள மாக்ரி கிராமத்தைச் சேர்ந்த கரிமான் மியான் என்ற முஸ்லீம் நபர் இறந்துவிட்டார்.

ஆனால், வாழ்நாள் முழுக்க மேஜிக் தொழில் செய்து வந்த கரிமான், இந்துக்களுடன் நெருங்கிய நட்புறவு பாராட்டி, இஸ்லாமிய மதக்கட்டுப்பாடுகளை மீறிவிட்டார், எனவே, அவரை இஸ்லாமியர்களுக்கான சுடுகாட்டில் புதைக்க அனுமதிக்க முடியாது என்று கூறி, சக முஸ்லீம்கள், கரிமானின் குடும்பத்தினரை தடுத்தனர்.  

இதனால், அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கரிமானின் சடலத்தை அவரது வீட்டிலேயே வைத்துவிட்டு, குடும்பத்தினர் வேதனையுடன் புலம்பிய நிலையில், அவர்களுக்கு உள்ளூர் இந்துக்கள் ஆதரவுக்கரம் நீட்டினர். அவர்கள் இறுதிச்சடங்குகளை செய்து, கரிமான் சடலத்தை புதைக்க வேண்டிய அனைத்து உதவிகளையும் நேரில் நின்று செய்து முடித்தனர். 

இதுபற்றி கரிமான் குடும்பத்தினர் கூறுகையில், நெருங்கிய உறவுகளும், இஸ்லாமிய மதத் தலைவர்களும் விதித்த தடை எங்களை மிகவும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால், இந்துக்களும், மற்ற சமூகத்தினரும் எங்களுக்கு மிக உதவிகரமாக நடந்துகொண்டனர். இது எங்களுக்கு புதிய படிப்பினை அளித்துள்ளது, என்றனர். இச்சம்பவம் இந்தியர்களின் மத ஒற்றுமைக்கு நல்ல உதாரணமாக உள்ளது...