ஏ படம் பார்க்க வயதுக்கு வராத பசங்க செஞ்ச வேலைய பார்த்தீங்களா?

ஜெய்ப்பூர்: சினிமா பார்ப்பதற்காக, ஆதார் அட்டையில் பள்ளி மாணவர்கள் வயதை மாற்றிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு, கபிர் சிங் என பெயரிடப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 21ம் தேதி இப்படம் ரிலீசானது. எனினும், இதற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதனால், 18 வயதுக்கு மேலான நபர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்ற  நிலை உள்ளது. 

எனினும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு விநோத யோசனை தோன்றியுள்ளது. கபிர் சிங் படத்திற்கு ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளதால், அது கண்டிப்பாக பலான படமாக இருக்கும் என்றும்,  அதனை எப்படியேனும் பார்த்துவிடுவது என்றும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்காக, தங்களது ஆதார் அட்டையை ஸ்மார்ட்ஃபோன் ஆப் ஒன்றின் உதவியுடன் எடிட் செய்து பிறந்த தேதியை மாற்றியிருக்கிறார்கள். 

இதன்மூலம், தங்களுக்கு 18 வயது நிரம்பிவிட்டதாகக் கூறி, தியேட்டருக்கு சென்று, கபிர் சிங் படத்தை அவர்கள் பார்த்துள்ளனர். படம் பார்த்தபின், அவர்களே இதனை பகிரங்கமாக வெளியிட்டுள்ளனர். புக் மை ஷோ மூலமாக டிக்கெட் புக் செய்துவிட்டு, மொபைல் ஆப் மூலமாக, ஆதார் அட்டையில் பிறந்த தேதி எடிட் செய்து மாற்றினோம். பின்னர் தியேட்டர் சென்றபோது, செக்யூரிட்டி வயதை கேட்கவே, ஆதார் அட்டையை காட்டி சமாளித்துவிட்டோம். இது திரிலிங்கான அனுபவமாக இருந்தது, என்று அந்த மாணவர்கள் ஊடகங்களில் பேட்டியும் அளித்துள்ளனர். 

இதுபற்றி தியேட்டர் நிர்வாகிகள் குறிப்பிடுகையில், கபிர் சிங் படத்திற்கு, பதின் வயதினர் இடையே அதிக வரவேற்பு காணப்படுகிறது. ஆனால், ஏ சான்றிதழ் தரப்பட்ட படம் என்பதால், அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாத நிலை உள்ளது, என்றனர். 

ஏ சான்றிதழ் தரப்பட்டுள்ளதால், பல இடங்களில் கபிர் சிங் படத்தை பார்க்க வரும் பதின் வயது நபர்களை தியேட்டர் நிர்வாகிகள் திருப்பி அனுப்பி வருகின்றனர். மேலும், பெற்றோருடன் வரும் சிறுவர்களுக்கும் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.