பல்கலைக்கழகத்தில் உடல் ரீதியாக துன்புறுத்தல்! பாஜக பெண் தலைவருக்கு மாணவர்களால் ஏற்பட்ட விபரீதம்!

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண் பாஜக பிரமுகர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் என்றப் பெயரில் ரவுடி கும்பல் ஒன்று உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பாஜக பெண் தலைவர் அக்னிமித்ரா பவுல் வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில், ஏபிவிபி சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோ, பாஜக பெண் தலைவர் அக்னி மித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

நிகழ்ச்சிக்கு பின் மாணவர்கள் சிலர் மத்திய இணை அமைச்சர் பாபுல் சுப்ரியோவை சிறைபிடித்து தாக்கியதாக பாஜக பெண் பிரமுகர் அக்னி மித்ரா குற்றம்சாட்டினார். பின்னர் தன்னையும் மாணவர்கள் என்ற பெயரில் சில ரவுடிகள் தாக்கியதாக கூறிய அக்னி மித்ரா தன்னுடைய ஆடைகளை கிழித்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாக வேதனை தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகத்தில் தான் மானபங்கப்படுத்தப்பட்டதாக கூறும் அக்னி மித்ரா பவுல் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசியதாகவும் புகார் கூறினார்.

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஒரு மத்திய இணை அமைச்சரும், நானும் சுமார் 4 மணிநேரம் தங்களுக்கும், தங்களது கண்ணியத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய இணை அமைச்சருக்கே இந்த நிலை என்றால் இந்த பல்கலைக் கழகத்தில் படிக்கும் மற்ற மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கிறது என அக்னி மித்ரா கனகனக்க வேதனை தெரிவித்தார்.