பாஜக செயல் தலைவர் ஆனார் ஜேபி நட்டா! இவர் யார் தெரியுமா?

பாஜகவின் தேசிய செயல் தலைவராக ஜேபி நட்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவி ஏற்றுள்ளது. பாஜக தலைவராக இருந்த அமித் ஷா மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பாஜக விதிகளின் படி ஒருவர் அரசில் அங்கம் வகித்தால் அவர் கட்சியில் பொறுப்பில் இருக்க முடியாது.

இதனை அடுத்து அமித் ஷா பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது. புதிய பாஜக தலைவரை தேர்வு செய்ய கடந்த வாரம் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய தேசிய தலைவர் குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதனை அடுத்து ஜேபி நட்டா இன்று பாஜகவின் புதிய செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர் பாஜக செயல் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள ஜே.பி நட்டா மோடியின் கடந்த அரசில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். 

பாஜகவின் தலைவராக நட்டா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் தலைவர் பதவியில் அமித் ஷாவே நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.