ஜெ. நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி..! குடும்ப ஆட்சிக்கு வழி விட மாட்டோம்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில், தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுகவினர் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்


ஜெயலலிதா நினைவுதின உறுதிமொழியை ஓ.பன்னீர்செல்வம் வாசிக்க அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

" ஜெயலலிதா தமது வாழ்வின் மிக அற்புதமான 34 ஆண்டுகளை, அதிமுகவுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த, தியாகச் செம்மல். அவர், அதிமுகவுக்கு ஆற்றிய அரும்பணிகளை, எந்நாளும் நினைவில் கொண்டு, கடமை உணர்வோடு பணியாற்றிட, உளமார உறுதி ஏற்கிறோம். 'அதிமுக என்பது ஆயிரம் காலத்துப் பயிர்; இது, தமிழ் நாட்டு மக்களுக்குத் தொண்டாற்ற தழைத்து நிற்கும் ஆலமரம்' என்று உரைத்த ஜெயலலிதாவின் முழக்கத்தின்படி, கட்சியின் மக்கள் நலப் பணிகள் தொடர்ந்து நடைபெற உழைப்போம், உழைப்போம், என்று உறுதி ஏற்கிறோம்.

ஜனநாயகத்தின் பெயரில், ஒரு குடும்ப ஆட்சி நிலைபெற்றுவிட்டால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல இயலாது என்பதை விளக்கிக் கூறிய அரசியல் ஆசான், ஜெயலலிதா. அவர் காட்டிய உண்மையான ஜனநாயகம் வேரூன்றவும், ஒரு குடும்பத்தின் ஏகபோக அரசியலும், ஆட்சியும் ஏற்படாத வண்ணம், மக்களாட்சியின் மாண்புகளைக் காப்போம் என்று உறுதி ஏற்கிறோம்.

இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட நேரங்களில், சுற்றிச் சுழன்று, அல்லும், பகலும் அயராது பாடுபட்டவர் ஜெயலலிதா. அவர் காட்டிய வழியில் பல்வேறு இயற்கைப் பேரிடர் நேரங்களில், தமிழ்நாட்டு மக்களுக்காக அற்புதமாய் பணியாற்றும் அதிமுக அரசின் சிறப்பான பணிகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க, உறுதி ஏற்கிறோம்.

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?' என்று, அதிமுகவின் வீர அணிவகுப்புகளைக் கண்டு, வெற்றி முழக்கம் செய்தவர், ஜெயலலிதா. நமது ஒற்றுமையே, நமது வெற்றிக்கு அடிப்படை. நமது முயற்சியே அதிமுகவின் வெற்றி. அதிமுகவின் வெற்றியே, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நாம் செலுத்தும் காணிக்கை என்பதை உணர்ந்து, அயராது உழைப்போம், உழைப்போம் என்று உளமார உறுதி ஏற்கிறோம்" என்று முதல்வர் உட்பட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.