கேரளாவுல இருக்கு, தமிழகத்திற்கு கிடையாதா..? சீமான் திடீர் போர்க்கொடி.

தமிழ்நாட்டிலிருந்து வேலைவாய்ப்பிற்காகவும், மேல் படிப்பிற்காகவும் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் அரபு மற்றும் கிழக்காசிய நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.


அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், தனிப்பட்ட சிக்கல்களிலும் பேரிடர் காலங்களிலும் விரைந்து உதவிடவும் ஒரு தனி அமைச்சகம் இதுவரையில் அமைக்கப்படாதது பெருங்குறையாக இருக்கிறது என்று சீமான் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி முடக்கிப்போட்டுள்ள கொரோனா நோய்த்தொற்றுப் பரவலும் அதையொட்டி வெளிநாடு வாழ் தமிழர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதிலும் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தமிழகம் அழைத்துவருவதில் ஏற்பட்ட சிக்கல்களும் தனி அமைச்சகத்தின் தேவையை நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது.

இதனை முன்பே உணர்ந்து தான், கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக வெளியிடப்பட்ட ஆட்சி செயற்பாட்டு வரைவில் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான தனி அமைச்சகம் ( Ministry of Overseas Tamil Affairs) அமைக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டு அதற்கான செயற்திட்ட வரைவையும் முன்மொழிந்தோம் என்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் வெளிநாடுவாழ் மலையாளிகளுக்கான தனி அமைச்சகம் 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுச் சிறப்பாகச் செயற்பட்டு வருவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடு செல்லும் மலையாளிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளை அந்த அமைச்சகம் மேற்கொள்வதுடன், நீண்ட நாட்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து நாடு திரும்பும் மலையாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்குதல், வேலையிழந்து திரும்புகிறவர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி, தொழில் தொடங்க கடனுதவி, அரசுப் பணிகளில் சேர பயிற்சி எனப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுக்கிறது.

குறிப்பாக இப்பேரிடர் காலத்தில் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் உள்ள மலையாளிகளைக் கேரளாவிற்குத் திரும்ப அழைத்து வர தேவையான விமானங்களை இந்திய அரசின் உதவியுடனும் தனியார் மூலமாகவும் இயக்கி நாட்டிலேயே அதிகளவிலான மக்களைத் திரும்ப அழைத்து வந்துள்ளது.

அதே வேளையில் புலம்பெயர் நாடுகளில் கடுமையான ஊரடங்கில் சிக்குண்டு வருமானமின்றி வாழ்வாதாரத்தை முற்றாக இழந்து தாயகம் திரும்ப முடியாமல் தவித்த தமிழர்கள், எல்லா உதவிகளுக்கும் இந்தியத் தூதரகத்தினை மட்டுமே எதிர்நோக்கவேண்டியிருந்தது. ஆனால் தூதரக அதிகாரிகள் பெரும்பாலும் வட இந்தியர்களாகவே இருந்ததனால் தகவல் தொடர்பில் ஏற்பட்ட தொய்வால் தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது வேதனையான உண்மை.

மாதந்தோறும் மிகப் பெரிய அளவிலான அந்நிய செலவாணியைத் தம் வருவாய் மூலம் நாட்டிற்கும் தமிழகத்திற்கும் ஈட்டித் தரும் வெளிநாடு வாழ் தமிழர்களுடன் இக்கட்டான சூழல்களில் துணைநிற்க வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமை என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் சீமான்.