தி.மு.க.வின் திட்டம் பணால்... உறுதியாகிறது, அ.தி.மு.க.வுடன் விஜயகாந்த் கட்சி கூட்டணி...

அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க.வை எப்படியாவது அங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று தி.மு.க. போட்ட பிளான் பணால் ஆகியிருக்கிறது. ஆம், மீண்டும் அ.தி.மு.க.வுடன் விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது.


வரும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுடன் இணைந்து செல்லும் கட்சிகளுடன் அ.தி.மு.க., தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது. அதன்படி, முதல்கட்டமாக பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளை வழங்கியுள்ளது.

பா.ம.க.வுடன் கடந்த மாதம் 27-ந்தேதி கூட்டணி உடன்படிக்கை முடிந்ததும், தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அ.தி.மு.க. தூது அனுப்பியது. ஆனால், அதை கண்டுகொள்ளாமல் கள்ளக்குறிச்சிக்குப் போய்விட்டார் பிரேமலதா. ஆகவே, அமைச்சர்கள் விஜயகாந்தை மட்டும் சந்தித்து திரும்பினார்கள்.

அடுத்தபடியாக, மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சில அமைச்சர்களுடன், தே.மு.தி.க. அவைத் தலைவர் இளங்கோவன், துணை செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் சந்தித்து பேசினார்கள். அப்போது, கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு இணையான தொகுதிகள் வேணும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், அ.தி.மு.க. தரப்பில் 14 இடங்கள் மட்டுமே தரப்படும் என்று கூறப்பட்டதாக தெரிகிறது.

அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பி.தங்கமணி அழைப்பு விடுத்திருந்தும், தே.மு.தி.க. தரப்பில் இருந்து யாரும் செல்லவில்லை. எனவே கூட்டணி உடைந்துவிட்டதாக தி.மு.க.வினர் செய்தி பரப்பினார்கள். இதனை பொய் என்று நிரூபிக்கும் வகையில், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது உறுதியாகியிருக்கிறது. தே.மு.தி.க.வும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளதால், நாளைக்குள் கையெழுத்தாகும் என்றே தெரியவந்துள்ளது. 

தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் இரு தரப்பிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் அ.தி.மு.க. வட்டாரத்தை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.