குவைத்தில் தவித்த 7 தமிழர்கள்! பெருந்தொகை கொடுத்து மீட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்! ரம்ஜான் நெகிழ்ச்சி!

கடந்த சில தினக்களாக ஊதியம் இல்லாமல் ,உணவு கூட இல்லாமல் நிற்கதியாக தமிழகத்தை சேர்ந்த ஏழு இளைஞர்களின் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


குவைத்தில் அதிக சம்பளத்திற்க்கு வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்ற போலி நிறுவனம் இந்த 7 நபர்களை பல மடங்கு தொகைக்கு பிணையம் வைத்துள்ளது. இந்த நிலையில் நிற்கதியான அசோக், ஹரிகிருஷ்ணன்,ராகேஷ், இஸ்மாயில், அப்துல் கலாம் ஆஸாத்,தமிமுன் அன்சாரி மற்றும் முகம்மது சலிம் ஆகிய  ஏழு பேர் மட்டுமின்றி இந்தியாவை சேர்ந்த முன்னூறுக்கும் மேற்ப்பட்டோரை அந்த போலி நிறுவனம் சிக்கலில் மாட்டிவைத்துள்ளது .

அதிலிருந்து மீண்டு தாயகம் திரும்ப வேண்டுமெனில் இவர்கள் புதிதாக வேலைக்கு சேர்ந்த துணை நிறுவனத்திற்கு இவர்களால் ஏற்பட்ட இழப்பு தொகையை செலுத்தி விட்டு செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தத்திற்கு ஆளாயினர்.இந்த நிலையில் இந்திய தூதரகம் வெறுமனே அந்த நிறுவனத்திலிருந்து பாஸ்போர்ட்டை மீட்க மட்டும் முயற்சிக்கும் எனவும்  தொகையை நீங்கள் தான் கட்டியாக வேண்டும் என கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட முன்னூறுக்கும் மேற்பட்டோரில் ஏழு பேர் மட்டும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மற்றவர்கள் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாநிலத்தை சேர்ந்த குவைத்தில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீட்டு தொகையை செலுத்த உத்திரவாதம் அளித்தனர்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல நிர்வாகத்தை அணுகியவர்களுக்கு , பெருநாள் தினமான இன்று அவர்களை தொழுகை நடக்கும் திடலுக்கு அழைத்து தொழுகையில் கலந்து கொண்ட மக்களிடம் கோரிக்கை வைத்து அந்த இடத்திலேயே அவர்கள் நிறுவனத்திற்கு கட்ட வேண்டிய இழப்பு தொகையை திரட்டி அங்கேயே அவர்கள் கையில் ஒப்படைத்தது. 

சாதி மத பிரிவினை தாண்டி மனிதநேய மிக்க மனிதர்கள் எல்லா இடங்களிலும் இருப்பதை, இந்த நிகழ்வு  உணர்த்துகிறது.