ஆந்திர முதல்வருக்கு டாக்டர் ராமதாஸ் பட்டம் வழங்கு பாராட்டு. ஓ… காரணம் இதுதானா?

ஆந்திரத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 56 சமூகங்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியம் அமைத்திருப்பதுடன், அவற்றில் 50%-க்கும் கூடுதலான வாரியங்களின் தலைவர்களாக பெண்களை நியமித்திருக்கிறீர்கள்.

இது சமூகநீதியையும், சமூக முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு, சரியான நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சரியான நடவடிக்கை ஆகும். இதற்காக பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தங்களுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் சாதிகளை பிற்போக்கின் அடையாளமாக பார்க்கும் போலி நாகரிக கலாச்சாரம் பெருகி வரும் சூழலில், சாதிகளை சமூகநீதியின் அடித்தளமாகவும், மாநில வளர்ச்சிக்கான அலகாகவும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இது தான் உண்மையான புரட்சியாகும். இதன் மூலம் நீங்கள் ஆந்திராவின் சமூகநீதிக் காவலராக உயர்ந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ‘ஆந்திராவின் சமூகநீதிக் காவலர்’ என்ற பட்டத்தை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.