டாக்டர்களுக்கே இந்த கதியா? தமிழக மக்களுக்கு மனசாட்சியே இல்லையா?

அம்பத்தூர் மயானத்தில் கொரானா பாதித்து இறந்த மருத்துவரின் சடலத்தைக் கண்டு மயான ஊழியர்கள் அலறியடித்து ஓடியுள்ளதையும், அப்பகுதி மக்கள் டாக்டரின் சடலத்தை எரிக்க எதிர்ப்பு தெரிவித்ததையும் கண்டித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் பதிவு இது.


விருகம்பாக்கத்தில் ஒரு தெருவில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒருவர் அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். இதை யாரோ அரசுக்கு தெரிவிக்க, காவல்துறை சகிதம் ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றிச் செல்கின்றனர். உடனே,அந்த தெருவிற்கு சீல் வைக்கப்பட்டது. தெருவாசிகளில் பலருக்கு சாவு பயமே வந்துவிட்டதாம்!

அன்று இரவு முழுக்க அந்த தெருவில் யாருமே தூங்கவில்லையாம்! ஆனால், அடுத்த நாள் அந்த இளைஞருக்கு ஒன்றுமே இல்லை என தெரியவந்ததையடுத்து தெருவில் வைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றப்பட்டன! வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவர் தகவல் சொல்லாததை இவ்வளவு பதட்டத்துடன் அணுகி, பீதியைக் கிளப்பியது யார்?

சென்னையைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் தனக்கு காய்ச்சல் என அரசுக்கு தகவல் தெரிவிக்க, உடனே அரசு ஆம்புலன்ஸ் ஒன்று பாய்ச்சலுடன் அவர் வசிக்கும் தெருவில் நுழைகிறது! ஒட்டு மொத்த தெருவும் பால்கனி, மொட்டைமாடிகளில் நின்று இதை வேடிக்கை பார்க்கிறது!

வந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் ஏதோ கொரானா நோயாளியை போல அவரை அழைத்துச் செல்கின்றனர்! தெருவே திகிலாகிறது…! எதிர்வீட்டுவாசிகள் இரவோடு இரவாக அலறியடித்து வீட்டைக் காலிசெய்து, சொந்த ஊருக்கு புறப்பட்டுவிட்டனர். 

ஆனால்,பரிசோதித்த மருத்துவமனையில் ஒன்றும் இல்லை வீட்டுக்கே போங்கள் எனக் கூறி அனுப்பிவிட்டனர்.இதற்குள் வீட்டு ஓனருக்குத் தகவல் சென்று அவர்,’’அம்மா வீட்டை காலிசெய்து நீங்களும் கொஞ்ச நாள் ஊருக்கு போங்க…’’ என நிர்பந்திக்க ஆரம்பித்துவிட்டார்! ’’அதெல்லாம் அவசியமில்லை’’ என அவர் தெளிவுபடுத்துவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது!

’# '’டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்கள் அனைவருமே கொரானா தொற்றுள்ளவர்கள்,அவர்கள் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவர்கள் கொரானாவைக் கொடுத்திருக்க கூடும்…’’ என்று கன்னாபின்னாவென்று பேசப்பட்டது! ஒரு பத்திரிகை, ’’மன்னிக்கமுடியாத குற்றம்’’ என பொங்கி எழுந்து பீதியையும்,வெறுப்பையும் ஒரு சேரப்பரப்பியது!

ஆனால்,டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்கள், என்ற வகையில் சுமார் ஆயிரம் பேருக்கு கொரானா இல்லை என உறுதிபட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது! அவர்களிலும் பலர் தற்போது குணமடைந்து நல்ல நிலையில் தேறிவருகின்றனர்! இதனால்,தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இறப்பார்கள் என சொல்லப்பட்டது.ஆனால்,இதுவரை தமிழ் நாட்டில் 11 பேர் தான் இறந்துள்ளனர். இதில் அனைவருமே டெல்லி மாநாடு சென்றவர்களும் அல்ல!

இதன் மூலம் கொரானா நோயாளிகளோடு பழகியவர்கள், தொட்டவர்கள் அனைவருக்குமே கொரானா பாதிப்பு வந்துவிடாது என்பதும், கொரானா தொற்று வந்துவிட்டாலுமே கூட அனைவரும் சாவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தவே இதைச் சொல்கிறேன்!

அதீத பயத்தையும், பல்லாயிரக்கணக்கானவர்களை சமூகவிலக்கம் செய்து தனிமைப்படுத்தியும் சமூதத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு கொரானா பிணம் மக்களை அச்சப்படுத்தாமல் என்ன செய்யும்? சாவுபயத்தின் உச்சத்திற்கு சமூகத்தை தள்ளிவிட்டதோடு, ’’பசித்தவனுக்கு உதவினாலே கொரானா வரும்..

உதவினால் நடவடிக்கை’’ என்றெல்லாம் மனிதநேயத்தை கொல்லத் தயங்காத அரசின் அணுகுமுறையே அம்பத்தூர் சம்பவத்திற்கு முழு பொறுப்பு என்று பகிர்ந்திருக்கிறார்.