மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
விரைவு ரயிலில் ஏழைகளுக்கு இடம் இல்லையா..? ராமதாஸ் ஆவேசம்

மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என, ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்த மாற்றம் தொழில்நுட்ப ரீதியில் அவசியமானது எனவும், அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 12) தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என ரயில்வே துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது ரயில்களில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையைப் பறிக்கும் செயலாகும்!
அனைத்து ரயில்களிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% சாதாரண வகுப்புப் பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல், முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். ரயில்வே துறை ஏழைகளின் தோழனாகத் தொடர வேண்டும்!" என வலியுறுத்தியுள்ளார்.