அடப்பாவமே, தனியார் மருத்துவமனையில் இவ்வளவு ரூபா கொள்ளை அடிக்க அரசாங்கமே ஒப்புதல் கொடுக்குதா..?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் நாளொன்றுக்கு ரூ.23ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலித்துக்கொள்ளலாம் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ள செய்தி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏனென்றால், கொரோனாவுக்கு எந்த மருந்தும் கிடையாது. பிறகு எதற்காக இவ்வளவு ரூபாய் என்பதுதான் ஆச்சர்யம். அதாவது, தங்கள் கண் முன்னே வைத்திருப்பதர்காக இத்தனை ஆயிரம் ரூபாயாம். இதன்படி குறைந்தது 10 நாட்கள் சிகிச்சை அளிக்கலாம் என்றும், ரூ.2,31,820 வசூலிக்கலாம் எனவும் இந்திய மருத்துவ கழகத்தின் தமிழக பிரிவு பரிந்துரை செய்துள்ளது. 

அதேபோன்று, தீவிர சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு 17 நாள் கட்டணமாக ரூ.4,31,411 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், தனிமைப்படுத்தப்படும் பணியாளர்களுக்கான கட்டணமாக ஒரு நாளைக்கு ரூ.9,600 வரை நிர்ணயிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் அறிந்து கொதித்துப்போய் ஒரு பதிவு போட்டுள்ளார், பிரபல மனநல மருத்துவர் ருத்ரன். இந்த கட்டணம் எத்தனை குடும்பங்களுக்கு இது சாத்தியம்? ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மேல் தொற்று இருந்தால்..?

மருத்துவமனைகள் இலவசமாகவே சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, ஆனால் அரசும் மருத்துவத் துறையும் இப்படி அதிகாரபூர்வமாய் ஒரு கட்டணம் நிர்ணயித்தால்,ஒரு நடுத்தர- ஒற்றை மாத வருமானத்தை வைத்து வாழ்வை நடத்துவோருக்கு முடியுமா? பலருக்கு மாத ஊதியங்களும் குறைக்கப்பட்டுள்ளன, பல குடும்பங்களில் கடன் கூடி வருகிறது. காப்பீட்டுத் தொகை எப்போதுமே மருத்துவமனை சொல்லும் முழுத் தொகைக்கும் ஈடாவதில்லை.

உடனே, ஏன் அரசு மருத்துவமனை போக வேண்டியது தானே என்று கேட்கவேண்டாம்’ அங்கே இடமில்லை. இந்த இக்கட்டான காலத்தில் கூட சலுகை தராத மருத்துவ வணிகமும் அதைக் கட்டுப்படுத்தாத அரசும் மக்கள் நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டவில்லை என்றே தெரிகிறது.

எல்லாரும் எச்சரிக்கையுடன் பாதுகாப்புக்குப் பரிந்துரைக்கப்பட்ட விலகல், முகக்கவசம் அணிதல், கைகளையாவது கழுவுதல் என்று இருக்க வேண்டும். அவர்கள் சொல்லும் தகவல்களே இப்போது நம்மிடையே தொற்று அதிகரிப்பதைக் காட்டுகிறது. நம்மை நாம் மட்டுமே இனி பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.