அ.தி.மு.க.வை வம்பில் சிக்கவைக்கிறாரா பா.ஜ.க. முருகன்..? தேவேந்திரகுல வேளாளர் விவகாரத்தில் சர்ச்சை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்திலேயே, தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் குறித்த விவகாரம் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இந்த நிலையில், கடந்த ஜூலை 4-ஆம் தேதி எல்.முருகன் ஓர் அறிக்கை வெளியிட்டு தமிழகத்தில் சர்ச்சையைத் தூண்டியுள்ளார்.


அவரது அறிக்கையில், "தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்" என்று முருகன் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம்தான் அ.தி.மு.க.வை கண் சிவக்க வைத்துள்ளது.

தற்போது தமிழகத்தில் பட்டியல் சாதிகளாக உள்ள குடும்பன், கடையன், தேவேந்திர குலத்தான், பள்ளன், வாதிரியார், பண்ணாடி, காலாடி ஆகிய ஏழு பிரிவுகளையும் 'தேவேந்திர குல வேளாளர்' எனும் ஒரே சாதியாக அறிவிக்கவேண்டும் என்று பல்லாண்டு காலமாக ஒரு கோரிக்கை நிலவி வருகிறது.

மேலும், தேவேந்திர குல வேளாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சாதியினரை இட ஒதுக்கீட்டுப் பிரிவில் பட்டியல் வகுப்பிலிருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

 இதனை பல கட்சியினரும் ஆதரித்தாலும், வேளாளர் என்ற பெயருடன் முன்னேறுவதை யாரும் விரும்பவில்லை. இதற்கு கொங்கு ஈஸ்வரன் வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

'வேளாளர்' எனும் பெயரில் ஏற்கனவே சில சாதிகள் இருக்கும்போது மேலும் புதிதாக ஒரு சாதிக்கு அந்தப் பெயரை வழங்குவது ஏற்கனவே 'வேளாளர்' என்று அறியப்படுவோரின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும் தமிழகத்தில் சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது. 

அதேநேரம், இந்த ஏழு சமூகத்திலும் ஒரு சமூகத்தவர் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை என்பதும் பிரச்னையாகியுள்ளது. வரும் தேர்தல் நேரத்தில் தேவேந்திரகுல வேளாளர் ஓட்டுக்களை வாங்கவேண்டும் என்ற பா.ஜ.க.வின் ஆசை நிறைவேறுமா…?