தமிழக பாஜக தலைவர் பதவிக்கு குறி வைக்கும் மதுரை பவர் ஸ்டார் மஹாலெட்சுமி! யார், எப்படி தெரியுமா?

தமிழக பாஜக தலைவராக மதுரையை சேர்ந்த பிரபலமான பெண் நிர்வாகி ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன.


கடந்த நவம்பர் மாதத்தில் முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர்ராஜன் தெலங்கானாவின் ஆளுநராக பொறுப்பேற்றார். அவர் பதவியை துறந்த பிறகு இன்னமும் தமிழ்நாட்டில் பாஜக தலைவர் பொறுப்பு காலியாகவே உள்ளது.

அவ்வப்போது சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், குப்புராமு ஆகிய முக்கிய பிரமுகர்களின் பெயர் காற்றில் பறந்த வண்ணமுள்ளன. இந்தப் பட்டியலில் தற்போது கூடுதலாக மற்றொரு பெயர் இணைந்துள்ளது. அவர்தான் மதுரையை சேர்ந்த மகாலட்சுமி. இவருடைய ஆதரவாளர்கள் அடுத்த தமிழக பாஜக தலைவர் இவர்தான் என்று முழக்கமிட்டு வருகின்றனர்.

அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களையும் எடுத்துரைக்கின்றனர். அதாவது பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா இனத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் தீவிரமாக பணியாற்றுவதால் தான் தமிழகத்தில் சௌராஷ்டிரா இனமக்களின் ஆதரவு பாஜக-வுக்கு உள்ளதாம்.

இவர் சொந்தமாக தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு சுய உதவி வேலைவாய்ப்பை பெற்று தந்திருக்கிறார். கட்சி நிகழ்ச்சிகளுக்கு தாராளமாக பணத்தை செலவு செய்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய சொந்த பணத்தில் லட்சக்கணக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் மகாலட்சுமி தான் அடுத்த தமிழக பாஜக தலைவர் பொறுப்பிற்கு பொருத்தமானவர் என்று அவர்களுடைய ஆதரவாளர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதைப்பற்றி மகாலட்சுமியிடம் கேட்டபோது. "கடந்த 22 ஆண்டுகளாக கட்சிப்பணி செய்து வருகிறேன். என்னால் இயன்ற அளவு இருக்கும் நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறேன். இதனால் கட்சியின் ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணத்தில் உள்ளது. நிச்சயமாக வாய்ப்பு கிடைத்தால் அந்த பதவியை நான் ஏற்றுக்கொள்வேன். பல தலைவர்கள் என்னுடைய பெயரை சிபாரிசு செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

நிச்சயமாக மகாலட்சுமி தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவருடைய ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.