ஸ்கேன் குழந்தையை பாதிக்குமா? - குழந்தை சிவப்பாக பிறக்க ஆசையா? - குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க வேண்டுமா?

கர்ப்பிணிக்கு ஸ்கேன் செய்யவேண்டும் என்று சொன்னாலே, வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும் என்று நினைத்து பெரியவர்கள் தயங்குவது உண்டு. பணம் பிடுங்கத்தான் ஸ்கேன் செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களும் உண்டு.·         பொதுவாக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் ஒலி அலைகள் மூலம் ஸ்கேன் செய்யப்படுவதால், வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.

·         நிஜமான கர்ப்பமா அல்லது முத்துப்பிள்ளை போன்ற விவகாரமா என்பதை ஸ்கேன் மூலமே கண்டறிய இயலும்.

·         ஸ்கேன் செய்வதால் சிசுவானது கருப்பையில் இருக்கிறதா அல்லது கருக்குழாயில் வளர்கிறதா என்பதை அறிய முடியும்.

·         இடைப்பட்ட, கடைசி வாரங்களில் ஸ்கேன் செய்யும்போது குழந்தையின் ரத்தவோட்டம், உடல் உறுப்புகள் சரியானபடி வளர்ந்திருக்கிறதா என்பதை அறிந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

சரியான நேரத்தில் செய்யாத ஸ்கேன் மற்றும் தவறான நேரத்தில் செய்யப்படும் ஸ்கேன் ஆகிய இரண்டும்தான் குழந்தைக்கு ஆபத்து உண்டாக்கலாம்.

1.    

        குழந்தை சிவப்பாக பிறக்க ஆசையா?

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றும் நாவல் பழம் சாப்பிட்டால் குழந்தை கருப்பாக பிறக்கும் என்றும் காலம்காலமாக மக்கள் நம்பிவருகிறார்கள். இது உண்மையா என்று பார்க்கலாம்.

·         குழந்தை கருப்பாக பிறப்பதும், சிவப்பாக பிறப்பதும் பெற்றோரின் மரபணு சார்ந்த விஷயம் மட்டுமே.

·         குழந்தையின் நிறம் மட்டுமின்றி கண்களின் நிறம், முடியின் நிறமும் பரம்பரைத்தன்மையைப் பொறுத்தே அமைகிறது.

·         பெற்றோர் கருப்பாக இருந்தாலும், முந்தைய தலைமுறையினர் நிறமாக இருந்தால் சிவப்பு குழந்தை பிறக்கலாம்.

·         கர்ப்பிணியின் செரிமானத்திற்கு வேண்டுமானால் குங்குமப்பூ பயன்படுமே தவிர, நிறம் தருவதற்கு அல்ல.

குங்குமப்பூ அதிக விலையுள்ளது என்பதால் நிறையவே டூப்ளிகேட் குங்குமப் பூவும் உலவுகிறது. டூப்ளிகேட் குங்குமப்பூ சாப்பிடுவது கர்ப்பிணி உடலுக்கு நிச்சயம் கேடு விளைவிக்கும்.

2.     குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டுபிடிக்க வேண்டுமா?

ஒரு பெண்ணுக்கு கர்ப்பம் உறுதியானதும், வயிற்றில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்துகொள்வதற்கு ஆசைப்படுவாள். பெயர் யோசிக்கவேண்டும் என்பதால் என்ன குழந்தை என்று மருத்துவரிடம் துணிந்து கேட்கும் பெண்களும் உண்டு.

·         பெண் குழந்தைகளை கலைக்கிறார்கள் என்பதால் நம் நாட்டில் ஸ்கேன் மூலம் பாலினம் கண்டறிவது தடை செய்யப்பட்டுள்ளது.

·         குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறதா என்பதை அறியவே ஸ்கேன் செய்யப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

·         வயிறு சிறியதாக இருந்தால் ஆண், பெரிதாக இருந்தால் பெண் என்று சொல்லப்படும் யூகங்களில் எந்த உண்மையும் கிடையாது.

·         புளிப்பு சுவை மீது ஆசை ஏற்படுவது, அதிகம் சோர்வு ஏற்படுவது போன்றவையும் ஆண் குழந்தையின் அறிகுறி என்பதிலும் உண்மை கிடையாது.

ஆண் குழந்தை என்றாலும் பெண் குழந்தை என்றாலும், அதனை வரவேற்கும் மனநிலையை பெற்றோர் வளர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, என்ன குழந்தை என்று முன்கூட்டியே அறிய முயற்சிக்கக்கூடாது.