ரஜினி டிவி தொடங்கப் போகிறாரா? வாட்ஸ் ஆப் லெட்டர் பேட் உண்மையா?

நடிகர் ரஜினி டிவி தொடங்க உள்ளதாக வாட்ஸ் ஆப்பில் பரவி வரும் மக்கள் மன்ற லெட்டர் பேடின் உண்மை நிலை என்ன என்பது தெரிய வந்துள்ளது.


   ரஜினியின் மக்கள் மன்ற லெட்டர் பேடில், தலைவர் டி.வி, சூப்பர் ஸ்டார் டிவி, ரஜினி டிவி என மூன்று பெயர்களை பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை டிரேட்மார்க்குகளை பதிவு செய்யு பதிவாளருக்கு ரஜினி கையெழுத்துடன் அனுப்பியது போன்று ஒரு புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் வெளியான உடன் நடிகர் ரஜினி தனியாக தொலைக்காட்சி துவங்க உள்ளதாக தகவல் வேகமாக பரவியது.

   மேலும் தந்தி டிவியில் இருந்து நீக்கப்பட்ட ரங்கராஜ் பாண்டே ரஜினியின் தொலைக்காட்சியில் பணியில் சேர உள்ளதாகவும் கூறப்பட்டது. லெட்டர் பேடில் ரஜினியின் கையெழுத்தும்இடம் பெற்று இருந்தது. இது போன்ற ஒரு மிக முக்கியமான லெட்டர் பேட் சமூக வலைதளங்களில் திடிரென பரவியதற்கான காரணம் தெரியவில்லை. மேலும் அது மார்பிங் செய்யப்பட்ட லெட்டர் பேடாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

   மேலும் தனது பெயரில் அதாவது ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி மற்றும் தலைவர டிவி என்கிற பெயரை டிரேட் மார்க்காக வி.எம்.சுதாகர் பயன்படுத்துவதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று அந்த லெட்டர் பேடில் ரஜினி கையெழுத்திட்டு இருந்தார். வி.எம். சுதாகர் வேறு யாரும் இல்லை. ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக உள்ளார். எனவே சுதாகர் மூலமாக ரஜினி தனது டிவியை ஆரம்பிக்க உள்ளதாக கூறப்பட்டது.

   எனவே இந்த தகவல் குறித்து தெரிந்து கொள்ள மக்கள் மன்ற மூத்த நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டோம். அவரிடம் கேட்ட போது, தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்கிற பேச்சுவார்த்தை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் உள்ளது உண்மை தான் என்றார். மேலும் ரஜினியிடமும் தனியாக தொலைக்காட்சி துவங்கினால் தான் புதிய கட்சி ஆரம்பிக்கும் போது நன்றாக இருக்கும் என்று நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும அவர் தெரிவித்தார்.

   ஆனால் ரஜினி முதலில் கட்சி, பிறகு சேனல் என்று கூறிவிட்டதாகவும் அந்தநிர்வாகி கூறினார். இந்த நிலையில் திடீரென போஸ் என்கிற ஒரு நபர் ரஜினி டிவி என்கிற பெயரில் யுட்யூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தார். மேலும் ரஜினி பெயரில் சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவும் சிலர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் ரஜினியின் பெயரை யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது, மேலும் வேறு ஒரு நபர் தொடங்கும் சேனலுடன் ரஜினிக்கு தொடர்பு இருப்பது போல் ஆகிவிடக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

   எனவே தான் ரஜினி டிவி, சூப்பர் ஸ்டார் டிவி, தலைவர் டிவி ஆகிய பெயர்களை டிரேட் மார்க்காக பதிவு செய்துவிடுவது என்றுதிட்டமிட்டு அதற்காக விண்ணப்பித்தோம். ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாள சுதாகர் தனது பெயரில் அந்த பெயர்களை டிரேட் மார்க்காக பதிவு செய்ய விண்ணப்பித்தார். ஆனால் பதிவாளர் ரஜினி என்பது ஒரு அடையாளம் தனி நபர்களுக்கு அந்த பெயரை பதிவு செய்து கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.

   மேலும் ரஜினியிடம் தடையில்லா சான்று வாங்கி கொடுத்தால் அந்த பெயர்களை சுதாகருக்கு டிரேட் மார்க்காக பதிவு செய்து கொடுப்பதாகவும் பதிவாளர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து ரஜினி டிவி,  தலைவர் டிவி, சூப்பர் ஸ்டார் டிவி ஆகிய பெயர்களில் டிரேட் மார்க் பதிவு செய்ய தனக்கு ஆட்சேபனை இல்லை என்று ரஜினி கையெழுத்திட்டு லெட்டர் பேட் கொடுத்துள்ளார்.

   மேலும் டிரேட் மாரக் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு பெயருக்கும் பிரத்யேக லோகோ அவசியம். அதனால் தான் தற்காலிகமாக ரஜினி டிவி, தலைவர் டி.வி, சூப்பர் ஸ்டார் டிவி என்கிற பெயரில் லோகோவும் தயாரித்து பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் மன்ற மூத்த நிர்வாகி கூறியுள்ளார். இதனைத்தான் பலரும் தவறாக நினைத்துக் கொண்ட ரஜினி டிவி ஆரம்பிக்க உள்ளதாக தகவலை பரப்புவதாக அவர் கூறி முடித்தார்.